The Yellow Sea– Rabies runs deep…..
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களின் கொடுமையில் இருந்து தப்பும் ஆசையில் பற்பல கொரியர்கள் கொரியாவில் இருந்து வெளியேறி சீனா, கொரியா, ரஷ்யாவுக்கு இடையில் இருக்கும் பிராந்தியம் ஒன்றில் (Yanbian autonomous province) குடியேறினார்கள். கொரியா இரண்டாகப் பிரிந்த பின்பு இங்குள்ளவர்களுக்கு வருமானத்திற்கான பிரதான வாய்ப்புகள் இரண்டு தான். மூன்று நாடுகளின் எல்லையை ஒட்டி இருப்பதால் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அல்லது சவுத் கொரியாவில் அடிமாடுகளைப் போல வேலை செய்வது.
வறுமை வழிந்தோடும் யான்ஜி நகரத்தில் டாக்சி ஓட்டுனராக இருக்கும் குனாம், வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் கடன் வாங்கி தன் மனைவியை சவுத் கொரியாவிற்கு வேலை செய்ய அனுப்பிகிறான். ஆனால் அவளிடம் இருந்து எந்த விதமான தகவலும் வராமலேயே போகிறது. அவனைச் சுற்றி இருக்கும் அனைவருமே குனாமின் மனைவி கொரியாவில் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் அதனால் தான் அவள் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறாள் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். நாள்பட நாள்பட குனாமும் அதையே உண்மையாக ஏற்றுக்கொள்கிறான். கடுமையான கடன் தொல்லையில் இருக்கும் குனாம், சூதாட்டத்தில் இறங்குகிறான். ஆனால் அதிலும் அவனுக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கிறது. குடும்பத்தை கவனிக்கவோ, கடனை அடைக்கவோ பணமில்லாது தவிக்கும் குனாமுக்கு இவை அனைத்தையும் சரி செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
உள்ளூர் மாஃபியா கொலைகாரன் ம்யூன், சவுத் கொரியாவில் ஒரு மனிதனைக் கொல்லும் பணியை குவானுக்கு தருவதாகவும் அதற்கு சன்மானமாக அவன் கடன் அனைத்தையும் அடைப்பதாகவும் வாக்குறுதி கொடுக்கிறான். கடன் அடைவது மட்டுமல்லாமல் சவுத் கொரியா செல்லும் வாய்ப்பும், தன் மனைவியை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் கிடைக்க, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஆசையில் ஒப்புக் கொள்கிறான் குனாம். கள்ளப்படகில் கொரியா வந்து சேரும் குனாம் பத்து நாட்களில் அந்த மனிதனைக் கொன்று விட்டு மறுபடியும் ஒரு கள்ளப்படகேறி தன் நாட்டிற்கு திரும்புவதாக ஏற்பாடு.
கொல்லவேண்டிய மனிதனை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் தன் மனைவியையும் தேட ஆரம்பிக்கிறான் குனாம். எட்டு நாட்கள் கடந்த பின், தான் கிளம்புவதற்கு முன் அவனைக் கொன்று விட்டு தப்புவதாக முடிவு செய்கிறான். ஆனால் அந்த மனிதனைக் கொல்லப் போகும் போது, அந்த முயற்சியில் தான் தனியாக இல்லை என்பதையும், ஏற்கனவே சிலர் தனக்குப் போட்டியாக இருப்பதையும், இரு கும்பல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டத்தையும் உணர்கிறான். அந்த மனிதனை குனாமால் கொல்ல முடிந்ததா, அவன் மனைவி என்னவானாள், குனாம் அந்தக் கும்பல்களிடம் இருந்து தப்பி தன் நாடு சேர்ந்தானா என்பது மிச்சக் கதை.
படத்தின் மிகப்பெரிய பலம், விறுவிறுப்பு. குனாம் கொரியக் கரையில் வந்து இறங்கும் போது இருளோடு கலந்து நிற்கும் விறுவிறுப்பு அவன் வேவு பார்க்க ஆரம்பித்த பின் மெல்ல மெல்ல வேகமெடுக்கிறது. குறிப்பாக, அந்த மனிதன் கொலையுண்ட பிறகு ஆரம்பிக்கும் துரத்தல் படம் முடியும் வரை ஓயாது. ஆனால் படத்தின் மிகப்பெரிய பிரச்சனையும் இதனாலேயே ஏற்படுகிறது. துரத்தலும், வன்முறையும், ரத்தமும் தெறிக்கும் விறுவிறுப்பான கதையில் தெளிவின்மை ரத்தக் கரையைப் போலவே வந்து ஒட்டிக் கொள்கிறது. குறிப்பாக ஒரு கட்டத்திற்கு மேல் யார் எதற்காக துரத்துகிறார்கள், யாரை துரத்துகிறார்கள் என்பதே மறந்து போகும் வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பை குறைக்காமல் திருப்பங்களை வழங்கும் முயற்சியில் இயக்குனர் தவறி விட்டார் என்றே தான் சொல்ல வேண்டும். இதன் கூடவே, வன்முறையை முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும். படத்தின் மற்றொரு மிகப்பெரிய குறை, நம்பகத்தன்மை இல்லாமை. ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்தும் குனாம் எழுந்து ஓடுவதும், வில்லன் எத்தனை வெட்டுப்பட்டாலும் கொன்று குவித்துக் கொண்டே இருப்பதும் படத்தில் சர்வ சாதாரணம். படத்தில் எந்தவொரு கதாப்பாத்திரமும் விரும்பக்கூடியதல்ல. ஆனால் கதை சொல்லும் உத்தி கொரியர்களுக்கு கைவந்த கலையாயிற்றே. எந்தவொரு பாத்திரமும் விரும்பக்கூடியதல்ல என்றாலும் இந்தத் துரத்தலின் முடிவென்ன என்பதை அறிவதில் ஆர்வம் ஏற்படவே செய்கிறது, அது யூகிக்கக் கூடியதாகவே இருந்தாலும் கூட. இயக்குனர் நா ஹோங்ஜின் “The Chaser” எனும் படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமானவர். படத்தில் பற்பல நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தாலும், மாபியா கொலைகாரத் தலைவன் ம்யூனாக வரும் யுன் ச்யூக் கிம்மின் நடிப்பு மற்ற எல்லோரையும் மறக்கடிக்கிறது என்பதே உண்மை. அபாரமான நடிகர். வெறியும், கோபமும், எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மையும், கொடூர மனமும் கொண்ட கொலைகாரன் வேடத்தில் பின்னியிருக்கிறார்.
கதையின் ஆரம்பத்தில் வெறி பிடித்த நாயொன்று எப்படி தன் கண்ணில் பட்ட எல்லோரையும் கடித்துக் கொன்று விட்டு பின்னர் தானும் இறந்தது என்பதான கதை ஒன்று வரும். கூடி வாழும் மிருகமென்றாலும் மனிதனை வெறி கொள்ளச் செய்வது எது? நம்பிக்கைகள் உடைக்கப்படும் போதும், துரோகங்கள் நிகழ்த்தப்படும் போதும் அது ஒரு மனிதனை எத்தகைய நிலைக்கு இட்டுச் செல்லும்? வெறியேறிய மனிதனின் காதுகள் ஓலக் குரல் தவிர்த்து வேறெதுவும் கேட்கும் சக்தி உள்ளனவாக இருக்குமா?The Yellow sea - வன்முறை விரும்பிகளுக்கு மட்டும்.
Rating: 3/5.
Trailer....
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=YoyKIBiCb7Y
வேண்டாம் அய்யா வன்முறை, காதல் படம் பாரும் கவிதையாக எழுதும் :)
ReplyDeleteஎனக்கு ப்ரோபசர் பட்டம் கிடைக்குற வரை அடங்க மாட்டேன்யா. :P
Deleteக்ளைமேக்ஸ்ல ஏதாவது ட்விஸ்ட்டு வச்சிருக்காரா டைரடக்டரு??
ReplyDeleteஎல்லாம் வழக்கமான ட்விஸ்ட் தான். ;)
Delete