Girl with the dragon tattoo - சலாண்டர் எங்கள் செல்லக் கண்மணி…..


girl with dragon
போதிய ஆதாரமின்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, குற்றவாளியாகவும் தீர்ப்பளிக்கப்படும் மிக்கேல் ப்லாம்கிவிஸ்ட் பல காலமாக தான் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயருடன் தன்னுடைய சேமிப்புப் பணத்தையும் பறிகொடுக்கும் நிலையில் இருக்கிறான்.  தன்னுடைய தோழி  எரிகாவுடன் நடத்தி வரும் “மில்லேனியம்” பத்திரிகையின் நம்பகத்தன்மையும், நற்பெயரும், விற்பனையும் தன்னால் பாதிக்கப்படும் என்பதையும் உணர்த்து தன்னுடைய எடிட்டர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறான்.
மூன்று மாத சிறை, அபராதம், வேலையின்மை என செய்வதறியாது திணறும் மிக்கேலுக்கு  மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரனான ஹென்றிக் வாக்னருடைய வக்கீலிடம் இருந்து  வாக்னரை வந்து நேரில் சந்திக்கமாறு  அழைப்பு வருகிறது. வாக்னரை நேரில் சந்திக்கும் மிக்கேலிடம் தன்னுடைய குடும்ப சரித்திரத்தைப் பற்றி  எழுதுவதான போர்வையில் நாற்பது வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன்னுடைய சகோரதனின் மகளான ஹாரியட்டின் கொலையாளியைக்  கண்டுபிடிக்கும் பணியை ஒப்படைக்கிறார். ஹாரியட்டை தன் குடும்பத்தில் ஒருவர் தான் கொன்றிருக்க முடியும் என உறுதியாக நம்பும் ஹென்றிக், அடுத்த ஒரு வருடத்திற்கு மிக்கேல்  துப்பறியும் பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றும்  நிபந்தனை விதிக்கிறார். 
நாற்பது வருடத்திற்கு முன்பான ஒரு விவகாரத்தை துப்பறிந்து உண்மையைக் கண்டுபிடிப்பது நடவாத காரியமென்று மறுக்க எத்தனிக்கும் மிக்கேலிடம்  அவர் எதுவும் கண்டுபிடிக்காமல் போனாலும் ஒப்பந்தப்படி ஒரு வருடத்திற்குப் பிறகு மிக்கேலின் மீது அவதூறு வழக்கு தொடுத்த வென்னர்ஸ்டார்மின் குற்றங்களை நிரூபிக்கும் ஆவணங்களை ஒப்படைப்பதாய் வாக்களிக்கிறார்.
வாக்னர் குடும்பத்தின் ரகசியங்களை ஹென்றிக்கின் உதவியோடு துப்பறிய ஆரம்பிக்கும் மிக்கேலுக்கு உதவியாக பின்னர் வந்து  சேருகிறார் லிஸ்பெத் சலாண்டர்.  சிறுவயதிலேயே கொலை முயற்சிக்  குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் பற்பல வன்முறைகளுக்காகவும் கைது செய்யப்பட்டு, மூளை வளர்ச்சி குன்றியவர் என்றும், சமூகத்தோடு ஒன்றிப் போகமுடியாதவர் என்றும் முத்திரை குத்தப்பட்டு  கண்காணிப்பில் இருக்கும் சலாண்டர், மில்டன் பாதுகாவல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சூப்பர் ஹேக்கர் ஜீனியஸ்.  பெண்களை வதைக்கும் ஆண்களை தண்டிக்கும் நேரம் போக மிக்கேலுடன் சேர்ந்து அவர் கொலையாளியை எப்படிக்  கண்டுபிடிக்கிறார் என்பதே நாவலின் கதை.
இந்நாவலைப் படிப்பதன் மூலம் ஸ்வீடனில் துன்புறுத்தப்படும் பெண்களின் புள்ளிவிவரங்களோடு, வாக்னர் குடும்பத்தின் ஏழு தலைமுறை சரித்திரத்தையும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பும் கிடைக்கும். அது மட்டுமல்லாது, படிக்கப் படிக்க சலிப்பூட்டும் கதை ஒன்றை எழுதுவது எப்படி, மர்மம் துளி கூட இல்லாத ஒரு மர்மத்தை முடிச்சவிழ்பது எப்படி, அதை அறுநூறு பக்கத்துக்கு இழுப்பது எப்படி (மேலே கவனிக்க: ஏழு தலைமுறை சரித்திரம் ),  புளித்துப் போன க்ளிசேக்களை வைத்து மொழிபெயர்ப்பு செய்வது எப்படி (இந்தப் புகழ் முழுக்க முழுக்க திருவாளர் ரெக் கீலன்ட்டிற்கே சேரும்) என்பதோடு மட்டுமல்லாது  வாழ்க்கைக்கு மிக உதவியான  காப்பி போடுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விவரணைகளையும் பத்து பக்கத்துக்கு ஒருமுறை  படிக்கும் பாக்கியம் கிடைக்கும். இவற்றிற்கெல்லாம் மேலாக,  (பெண்களுக்கு எதிரான) அநியாயத்தக் கண்டா பொங்குவாடா இந்த லிஸ்பெத்து என்று சூழுரைக்கும் ஒரு அற்புதமான, அரிய, இதுவரை வாழ்க்கையில எங்கேயுமே கண்டிருக்க முடியாத  கதாப்பாத்திரமான லிஸ்பெத் (சூப்பர் வுமன் லிஸ்பத் என்று படிக்கவும்)  குறித்தும் அறிந்துகொள்ளவும் அதனால் பிறவிப் பயன் சிறக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

“Unique and fascinating… Like a blast of cold fresh air…”
என்ற அரதப் பழசான க்ளிசேவை அட்டையில் கண்டவுடனேயே உசாராகும் திறமை இல்லாதவர்கள், பெஸ்ட் செல்லர் லிஸ்ட்டில் இருக்கும் புத்தகம் நன்றாகவே இருக்கும் என்ற தீரா நம்பிக்கையும் நப்பாசையும் கொண்டவர்கள், நாவல் படித்தபின்பே படம் பார்ப்பேன் என்ற முத்தான கொள்கை கொண்ட நல்ல உள்ளங்கள் அனைவரும் நாவலைப் படித்து நாக்கு தொங்கிப் போகாமல் படத்தை நேரடியாகப் பார்ப்பது நலம்.  குறிப்பாக, படத்தை இயக்கி இருப்பது மொக்கை நாவலையும் மிகப்பெரிய ஹிட் ஆக்கும் David Fincher (கவனிக்க: பைட் க்ளப், இது) என்பது மிகப்பெரிய ஆறுதல்.  படத்தில் இதை நிரூபிக்கும் பல காட்சிகளும் உண்டு. நாவலில் க்ளிசே கூத்தாடுகிறது. “I would give his head in a plate to you” என்று ஒரு அரதப் பழசான க்ளிசே மிக்கேல் உதவி செய்தால் அவனுக்கு வென்னர்ஸ்டார்ம் பற்றிய The-Girl-With-The-Dragon-Tattoo-2011-1ஆதாரங்களைத்  தருவேன் என்று  ஹென்றிக் சொல்லும் கட்டத்தில் வரும். இதுவே படத்தில் இருவரும்  சாப்பிட்டுக்கொண்டே பேசுவது போலவும், ஹென்றிக் “ நீ எனக்கு உதவி செய்தால்” என்று  சொல்லி வென்னர்ஸ்டார்ம்  பேரைக் குறிப்பிட்டு பக்கத்தில் தட்டில் இருக்கும் மாமிசத்தை   மிக்கேல் பக்கம்  நகர்த்துவதாய்  காட்சி  வரும். படுமட்டமான க்ளிசே காட்சியையும் சுவாரஸ்யப்படுத்தும் விதம் அது. போதாக்குறைக்கு சலாண்டர் பாத்திரத்தை படத்தில்  கெடுத்துட்டாங்க என்ற குற்றசாட்டும் உண்டு. என்னைப் பொறுத்தவரையில், நாவலில் வரும் சலாண்டர் பாத்திரத்தை விட படத்தில் வரும் பாத்திரம் சுவாரஸ்யமானது. குறிப்பாக ரூனி மாராவின் நடிப்பு. படத்தை பார்க்க இவரது நடிப்பை விட சிறந்ததொரு காரணத்தை சொல்லிவிடவே முடியாது. இதே தருணத்தில் ஸ்வீடிஷ் வெர்சனில் ரப்பாசேவின் நடிப்பும் நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. 

lisbethரப்பாசேயின் நடிப்புக்கு போட்டி போடக் கூடிய ஒருவர் உண்டென்றால் அது பாண்டு பாய் கிரெய்க் தவிர்த்து வேறு யாராகவும் இருக்கமுடியாது.  உணர்ச்சிகளை வெளிக் காட்டாத கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் க்ரெய்க் வல்லவர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அண்ணனுக்கு அது மட்டும் தான் வரும் என்பதும்.  எமோசனுக்கும் கிரெய்குக்கும் சம்பந்தம் உண்டு என்று யார் தீர்மானித்தார்களோ தெரியவில்லை. அண்ணன் கதை ஆரம்பத்திலேயே zombie ஆகிட்டார் என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்.lisbethq

படத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை. ஹாரியட் மறைந்த “மர்மம்” என்ன என்பதை அவள் கொலை தான் செய்யப்பட்டாள் என்று எல்லோருமே சொல்வதில் இருந்தே ஊகித்துவிடலாம். அதை ஊகித்த பின்னர் காரணத்தை கண்டுபிடிப்பது கஷ்டமே அல்ல. அதிலும் ஹாரியட் பைபிள் படிப்பதிலும் மேக்கப் போடுவதிலும் ஆர்வம் காட்டினாள் என்று சொல்லும்போதே ஒன்றிரண்டு கிரைம் த்ரில்லர் நாவல் படித்த எவரும் காரணத்தை எளிதாகச்  சொல்லிவிடலாம்.  கொலைகளை செய்வது யார் என்பதையும் கண்ணை மூடிக் கொண்டு முதலிலேயே சொல்லி விடலாம். அவ்வளவு தெளிவு.  ஆனால்  கொலைகாரனை கண்டுபிடிக்க துப்பு சேகரிப்பது, அவனிடம் மாட்டிக் கொண்ட பின் வரும் காட்சிகள் ஆகியவற்றை முடிந்த அளவுக்கு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்கள். பெரிதாக சொல்லிக் கொள்ளவோ, புதிதாக கண்டறிந்துகொள்ளவோ எதுவும் இல்லாவிட்டாலும் படம் ஒரு நல்ல என்டர்டைனர்.
படுமொக்கயான ஒரு கதை எப்படி இவ்வளவு புகழ் பெற்றது என்று தேடித் பார்த்தால் காரணம் சலான்டரிலும், அதை உருவாக்கிய லார்சனிடமும்  வந்து நிற்கிறது. ஸ்வீடிஷில் நாவலின் ஒரிஜினல் டைட்டில், “பெண்களை வெறுக்கும் ஆண்கள்"(Men who hate women). பேரை காப்பாற்றும் உயரிய பணியில் லார்சன் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். கதையில் கொடுமைப்படுத்தபடாத பெண்ணே இல்லை எனலாம். சிறிதோ பெரிதோ, சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ பெண்கள் அனைவருமே பாலியல் கொடுமைக்கு ஆளானவர்கள். மிக்கேலைக் கண்டாலே பெண்களுக்கு எப்படி கள்வெறி வருகிறதோ அதை விட அதிகமாக இக்கதையின் ஆண்களுக்கு பெண்களைக் கண்டால் கலவிவெறி வருகிறது. மில்லேனியம் பத்திரிக்கைக்கு தன்னுடைய சொந்த பத்திரிக்கையையும், மிக்கேல் கதாப்பாத்திரத்திற்கு தன்னையும் தழுவி எழுதினார் லார்சன் என்பது தகவல். அது மட்டுமல்லாது, தன் கண் முன்னரே கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் தான் லிஸ்பெத் என்றும் லார்சன் சொன்னதாக விக்கி சொல்கிறது. ஆனால் இந்தக் கதையே கப்சா என்றும் அதே விக்கி சொல்கிறது. எது எப்படியோ, ட்விலைட்டுக்குப் பின்னர் பெண்கள் கொண்டாட ஏதுவாக ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கிய பெருமையும், கதையே எழுத வராத திறமையும் லார்சனையே சேரும். லிஸ்பெத் அடி பின்னிட்டா என்பதில் தொடங்கிய பேச்சு பின்னர் லிஸ்பெத் அடுத்த பாகமொன்றில் சிலிக்கான் சிகிச்சை செய்ததாக காட்டியது பெண்களுக்கே இழுக்கு என்று விவாத்தில் வந்து நிற்கிறது (பார்க்க: Goodreads discussions on Girl with the dragon tattoo). கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சிகிட்டுத் தான் கொடுக்கும். ஆனா டீன் ஏஜ் பொண்ணுக காரணமில்லாமலேயே கொடுப்பாங்க என்பது லார்சனின் உபயத்தில் நிரூபணம் ஆகியிருக்கிறது (Twilight புகழ் ஸ்டெபனி மெயர் மன்னிக்க) .

Comments

  1. Next post might be on Norwegian wood.

    ReplyDelete
  2. ரூனி மாராவை செல்லம் என்று சொல்ல தமிழில் நான் மட்டுமே காப்பி ரைட் வாங்கியிருப்பதால் நீங்கள் வாழ்க வளர்க என கோசமிட்டு வருகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. சலாண்டர் பேர தான் எங்கப்பத்தாவுக்கு வைக்கப் போறேன்.

      - சலாண்டர் செல்லப்பா. :)

      Delete
  3. நவோமி, ஸ்டெய்க், க்ரெய்க் என பலபேரிற்கு நல்ல பெயரை வாங்கித்தந்திருக்கும் இப்பதிவு தங்கள் தங்கமான மனதை ஒரு நிலைக் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. சந்தடிச் சாக்கில் மெயர், டீன் ஏஜ் பிகர்கள் இவர்களையும் நக்கலடித்ததைப் பற்றி சொல்லாமல் விட்டதற்காக கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன். ;)

      Delete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

Punisher Max in Tamil.... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......