கடல்புறா 3 – புயல் விடு தூது....
ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான்.
அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்தப்படுத்த விரும்புவன போல அவற்றை நோக்கி விரைந்த மழைத்துளிகளும் அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. படகின் நடனமோ, காற்றளித்த கானமோ, தாளம் போட்ட அலைகளோ அவனது சிந்தனையைக் குலைக்க சக்தியற்றவையாகின. தனது காதலைப் பற்றி அந்த மஞ்சள் மயிலுக்கு தூது அனுப்பக் கூட வழி இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த கருணாகரனைக் கண்ட காற்று கடல்புறாவை அசைத்துக் காட்டியது. தூது போக விருப்பப்படுவது போல புயலும் மெல்ல மெல்ல கடல்புறாவை அணுகிக் கொண்டிருந்தது.
கருணாகரனை அணுகியது தூது போக ஆசைப்பட்ட புயல் மட்டுமல்ல. விருப்பமில்லாத பிரயாணத்தில் பிடிபட்ட அக்ஷயமுனைத் தலைவனும் போகும் இடம் பற்றித் தெரிந்து கொள்ள இளைய பல்லவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஆனால் போகவிருக்கும் இடத்தைக் கேட்டதும் வானத்தில் கருத்திருந்த மேகத்தைக் காட்டிலும் பலவர்மனது முகம் கருத்தது. கோபத்தோடு வந்து மோதிய அலைகளின் வேகத்தைக் காட்டிலும் அதிவேகத்துடன் அவன் மனதை பயம் வந்து ஆக்ரமித்தது. அலைகளின் பேரிரைச்சலையும் வரப்போகும் பேரிடர் பற்றிய சிந்தனை மறக்கடித்தது. கருணாகரன் போக விரும்பிய மாநக்காவரத்தை பற்றி எண்ணிப்பார்த்த உடனேயே பலவர்மனது உடல் நடுங்கியது. ஏதோ சொல்ல முற்பட்டு மெல்ல வெளிவந்த அவனது குரலை திடீரென எழுந்த பெருங்கூச்சல் ஒன்று அடக்கியது. கடல்புறாவை நோக்கி வந்து கொண்டிருந்த இரு போர்க் கப்பல்களைக் கண்டதும் பலவர்மனது பயம் பல மடங்கு அதிகமானது. சத்தமின்றி மெல்ல நெருங்கும் காலனைப் போல காரிருளில் கடற்போர் புரிய அந்தக் கலங்கள் இரண்டும் அசைந்தாடி வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து நடந்த போரில் சுழற்றி அடித்த காற்றோடு போட்டியிட்டுப் சுழன்று சுழன்று போர் புரிந்த கடல்புறா வென்றது. ஆனால் கடல்போரில் அனுபவமில்லாத பலவர்மனை எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று தாக்க, சுற்றியிருந்த இருள் பலவர்மனது கண்களுக்குள்ளும் மெல்ல புகுந்து ஊடுருவியது.
போரில் வென்ற களிப்போடு அலையில் சீறிச் சென்ற கடல்புறா சிறிது நாட்களிலேயே மாநக்காவரத்தினருகே வந்தடைந்தது. போரில் ஏற்பட்ட காயத்தால் பலவர்மன் சுரணை தவறிக் கிடந்தாலும் அவனது உதடுகள் “அபாயம்!” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் அடிக்கடி முணுமுணுக்கத் தவறவில்லை. காதலனின் வருகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் காதலியின் நாணத்தைப்போல இருந்தும் தெரியாமல் தூரத்தே எரிந்து கொண்டிருந்த ஒற்றைப்பந்தம் கடல்புறா மாநக்காவரத்தை எட்டிவிட்டதை பறைசாற்றியது. ஆனால் கரையை நோக்கிப் போகும் கப்பலை தடுக்கும்வண்ணம் உக்கிரத்தோடு மோதிய அலைகள் கடல்புறாவிடம் சொல்ல வந்த சேதி தான் என்ன? கடலலையில் நர்த்தனமாடிச் செல்லும் கடல்புறாவை கபளீகரம் பண்ணக் கரையில் காத்திருக்கும் அபாயம் எத்தகையது? அதில் இருந்து தப்பி, மாநக்காவரத்தில் தான் ஆசைப்பட்டது போல கருணாகரனால் ஒரு கடற்போர் தளத்தை அமைக்க முடிந்ததா? ஸ்ரீவிஜயத்தை வெல்ல வேண்டும் என்ற தனது கனவை நினைவாக்கத்தான் முடிந்ததா? தூது அனுப்ப வழியில்லாது தவித்த புயலுக்கு சமாதானத் தூது அனுப்பும் நிலை ஸ்ரீவிஜயத்துக்கு வந்ததா?
மூன்றாம் பாகத்தின் முற்பகுதி அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும் கருணாகரன் மாநக்காவரத்தில் கடற்தளம் அமைப்பதையும், பின்னர் அவனது கடற்கொள்ளையர் குழுமத்தின் மூலம் கலிங்கத்தின் கடற்பலத்தை உடைப்பது குறித்தும்; பிற்பகுதி ஸ்ரீவிஜயத்தின் மேலான படையெடுப்பையும் கொண்டிருக்கிறது. மூன்றாம் பாகத்தின் முதற்பகுதி சிற்சில மாற்றங்கள் இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டாம் பாகத்தை ஒத்திருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் இரண்டாம் பாகத்தின் நீளம் இதில் கிடையாது என்பதும் மிகப்பெரிய ஆறுதல். இப்பாகத்தின் மிகப்பெரிய பலம், கடற்போர் விவரணைகள். குறிப்பாக, கடைசி நூறு பக்கங்களின் விறுவிறுப்பு தனித்தன்மையானது. இப்பாகத்தில் வரும் கடல்போர் குறித்த விவரணைகள், சாண்டில்யன் எழுதிய எந்தக்கதையையும் விட அருமையாக சொல்லப்பட்டிருக்கும்.
சரி, இப்பொழுது முதல் பாகத்தில் இருந்து இறுதிப் பாகம் வரையான கருணாகரனது பயணத்தைப் பார்ப்போம். ஸ்ரீவிஜயத்தின் மேலான படையெடுப்பு, கலிங்க சோழப் பகை, கலிங்கப்போரின் போது கருணாகர பல்லவன் செய்த பற்பல அட்டூழியங்கள் ஆகியவற்றை இணைத்து இவை அனைத்துக்கும் காரணம் கற்பிக்கும் வண்ணம் இட்டுக்கட்டி எழுதப்பட்டதே முதல் பாகம் என்பதை முன்னரே பார்த்தோம். ஒரு அருமையான சரித்திரக் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதல் பாகம் ஒரு அற்புதமான உதாரணம் என்று கூறலாம். காதல், சிருங்காரம், வீரம், விறுவிறுப்பு என்று எல்லாமே சரியான கலவையில் இப்பாகத்தில் கலந்திருக்கும். மேலும், அநபாயன், கருணாகரன், அமீர், கலிங்கத்து பீமன்,காஞ்சனா என்று கதாப்பாதிரங்களும்,அவற்றின் அறிமுகங்களும் கூட அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இரண்டாம் பாகம், கருணாகரன் கலிங்கத்தில் இருந்து அகூதாவின் உதவியோடு தப்பி அவனிடம் கடல்போர் முறைகளை பயின்ற பின்னர் நடக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. கலிங்கத்தில் இருந்து தப்பிய பின் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு கதை ஆரம்பிக்கிறது. கடல்தளம் ஒன்றை அமைக்க ஆசைப்படும் கருணாகரன் ஸ்ரீவிஜயத்துக்கும் கலிங்கத்துக்கும் நடுவில் இருக்கும் அக்ஷயமுனையில் தனது தளத்தை அமைத்து கலிங்கத்தின் கடற்பலத்தை ஒடுக்க நினைக்கிறான். அதை செயல்படுத்தும் நோக்கில் அக்ஷயமுனைக்கு வரவும் செய்கிறான். பிரபல கொள்ளைக்காரனான அகூதாவின் உபதளபதியாக இருந்தவன் என்ற பயம் தனக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பி அக்ஷயமுனைக்கு வரும் இளையபல்லவனுக்கு பலவிதத் தொல்லைகள் வருகின்றன. கொள்ளைக்காரர்கள் ஒருபுறம், காட்டுவாசிகள் மறுபுறம், வஞ்சகம் நிறைந்த கோட்டைத்தலைவன் இவர்களுக்கு நடுவே என்று அவனுக்கு ஏற்படும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நடுவே பூக்கும் காதலும் இன்பத்தை விட பிரச்சனைகளையே மென்மேலும் கொண்டுவந்து சேர்க்கிறது. முற்றிலும் கற்பனை கலந்து எழுதப்பட்ட பாகம் இது. கதையை கவனித்தால் இதை எவ்வளவு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம் என்பது தெரியவரும். முதல் பாகத்தின் பரபர கதையோட்டத்திற்குப் பின்னர் நாம் அவ்வாறு எதிர்பார்ப்பதில் தவறும் கிடையாது. ஆனால் இப்பாகத்தில் விறுவிறுப்பு மிகக்குறைவே. பல திருப்பங்கள் உண்டு என்றாலும் அவை ஊகிக்கக்கூடிய முறையில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய சறுக்கல். இளையபல்லவன் தவிர்த்து வேறெந்த கதாப்பாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதும் மிகப்பெரிய குறையே. பலவர்மனது கதாப்பாத்திரம் பெயரில் மட்டுமே பலம் பொருந்தியதாக இருப்பதும் கதையின் விறுவிறுப்பிற்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது. சற்றே பொறுமையோடு, முதல் பாகத்தையொட்டிய வேகத்திற்கான எதிர்பார்ப்பை தள்ளிவைத்து விட்டுப் படித்தால் இப்பாகத்தை ரசிக்கலாம்.
அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும் இளையபல்லவன் மாநக்காவரத் தீவுகளை நோக்கி அங்கே கடற்தளம் அமைக்கும் எண்ணத்தில் சென்று, அங்கேயும் பிரச்சனைகளை சந்தித்து, கடற்தளம் அமைத்து கலிங்கத்தின் கடல்பலத்தை ஒடுக்குவது குறித்து முற்பாதியிலும், ஸ்ரீவிஜயத்தின் மீதான போர் குறித்து பிற்பாதியிலும் கொண்டது மூன்றாம் பாகம். முன்னரே சொன்னது போல, முன்பாதி இரண்டாம் பாகத்தை ஒத்திருப்பது அலுப்பை ஏற்படுத்தக் கூடியவொன்றே. ஆனால் இரண்டாம் பாகத்தை விட இதில் சற்றே விறுவிறுப்பு உண்டு என்பது ஆறுதல். மூன்றாம் பாகத்தின் பிற்பகுதியானது கலிங்கத்தின் மீதான போருக்கான ஆயத்தங்கள், போருக்கு வித்திடும் சூழ்நிலைகள், தொடரும் போர் போன்றவை பற்றியது. ஸ்ரீவிஜயத்தின் துறைமுகப்போர் பற்றிய சாண்டில்யனின் விவரணைகள் அற்புதமானவை. ஜம்பி நதியின் முரட்டு நீரோட்டத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல கடைசிப் போரின் விறுவிறுப்பு. இப்பாகத்தின் முற்பகுதியில் வரும் கங்கவர்மன் கதாப்பாத்திரம் பலவர்மனது பாத்திரத்தை விட சூழ்ச்சியும் அறிவும் பொருந்தியது என்பதால் சற்றே விறுவிறுப்பைத் தரும் வகையில் இருக்கிறது என்றாலும், இதையெல்லாம் இரண்டாம் பாகத்திலேயே படித்தாயிற்றே என்ற எண்ணம் தரும் அலுப்பு அதனைப் பல சமயங்களில் மட்டுப்படுதவே செய்கிறது. பிற்பகுதியில் வரும் ஸ்ரீவிஜயச்சக்ரவர்த்திக்கும் பெரிதான வேலை ஏதுமில்லை என்றாலும் கதையோட்டம் அதை மறக்கச் செய்கிறது.
கடல்புறாவும் யவனராணியும் சாண்டில்யனின் கதைகளிலேயே மிகச் சிறந்தவை என்று சொல்லப்படுபவை. ஆனாலும், கடற்போர் குறித்தான விவரணைகளில் சாண்டில்யன் எழுதிய எந்தக் கதையையும் விட இதில் விறுவிறுப்பும், விவரணையும், வேகமும் அதிகம். மலையூரில் தொடங்கும் கடற்போர் தொடங்கி ஸ்ரீவிஜயத்தின் துறைமுகத்தில் நடக்கும் கடற்போர் வரையான கட்டங்கள் சாண்டில்யனின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சமீபத்தில் கனவுகளின் காதலரோடு விவாதிக்கையில் கடல் புறாவை சரித்திரப் புனைவு என்று சொல்லாமல் சரித்திர இழை கொண்ட சாகசப் புனைவு என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று கூறினார். அது உண்மையே. யவன ராணியில் சரித்திரச் சம்பவங்களை நெருக்கமாக ஒட்டியே கதை பின்னப்பட்டு சரித்திரத்தில் இல்லாத இடைவெளிகளை கற்பனை கொண்டு நிரப்பும் வகையிலேயே கதையோட்டம் இருக்கும். கடல்புறாவில் சரித்திரம் பிரதானமாக இல்லாது, சாகசமே பிரதானமாக இருக்கும்.
மேலும், இத்தனை காலம் கழித்து சாண்டில்யனின் எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் சொல்ல வேண்டுமென விவாதித்தோம். சரித்திர நாவல்களை எழுதிப் பெரும் பெயர் பெற்றவர்களில் முக்கியமானவர் இருவர். ஒருவர் கல்கி, மற்றவர் சாண்டில்யன். கல்கியின் எழுத்தை நான் முதன்முறை படிக்கையில் கூட அது எனக்கு எந்தவிதமான ஆர்வத்தையும் தரவில்லை, சிவகாமியின் சபதத்தைத் தவிர்த்து. சிவகாமியின் சபதம் அருமையானதொரு கதைக்களனைக் கொண்டிருந்தாலும் எழுத்துநடை இப்போது படிக்கும் போது நிச்சயம் அலுப்பையே ஏற்படுத்தும்.
சாண்டில்யன் முறைப்படி தமிழ் இலக்கியத்தையும், புராணத்தையும் பயின்றவர் என்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமேதும் கிடையாது. முதல் பாகத்தை நான் மறுபடி படிக்க ஆரம்பித்த பொழுது என் நினைவில் உள்ளதை விட அதில் வர்ணனைகள் சிறப்பாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமே அடைந்தேன். கதையின் விறுவிறுப்பும் இரண்டாம் வாசிப்பில் மங்கவில்லை. இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகத்தின் முற்பகுதியும் முதல் பாகத்தின் வேகத்திற்கு எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது என்ற போதிலும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கடல் புறா எக்காலத்தில் படித்தாலும் அலுக்காத அருமையானதொரு சாகசப் புனைவு.
முதல் பாகம் போல கதாப்பாத்திரங்களுக்கு அருமையானதொரு தளத்தையும்,ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் இயல்பையும் மற்ற பாகங்கள் சொல்லவில்லை என்பதே எனது எண்ணம். மூன்றாம் பாகம் சற்றே விறுவிறுப்பாக போகும் என்றாலும், காஞ்சனா முதல் பாகத்தில் ஒரு அருமையான பாத்திரம். மூன்றாம் பாகத்தில் வெறும் கதாநாயகி,அவ்வளவே. ஒரு அருமையான வீராங்கனையை வீணடித்த பாவம் சாண்டில்யனுக்கு எப்போதும் உண்டு. அதே போல தான் அமீர் பாத்திரமும்.
ReplyDeleteஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கடல் புறா எக்காலத்தில் படித்தாலும் அலுக்காத அருமையானதொரு சாகசப் புனைவு.
ReplyDeletenice..
அடுத்து கடல்புறா-4 , எப்ப வெளியாகும் சார்?..
ReplyDeleteபொழுது போகாம பொலி போடுற மூட்ல இருக்கும் போது அடுத்த பாகம் வெளியாகும் சார். :)
Deleteமலையூரில் தொடங்கும் கடற்போர் தொடங்கி ஸ்ரீவிஜயத்தின் துறைமுகத்தில் நடக்கும் கடற்போர் வரையான கட்டங்கள் சாண்டில்யனின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
ReplyDelete//
சூப்பர் சார்...
இதைப்பற்றி மேலும் விரிவாக, தங்களால் விளக்கமுடியமா சார்?..
அறிய ஆவலாக உள்ளேன்....
கொள்ளைக்காரர்கள் ஒருபுறம், காட்டுவாசிகள் மறுபுறம், வஞ்சகம் நிறைந்த கோட்டைத்தலைவன் இவர்களுக்கு நடுவே என்று அவனுக்கு ஏற்படும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ReplyDelete//
சூப்பரா இருக்கும்போல..
கிளைமாக்ஸ் என்னாகும் சார்?..
என் உணர்வை தூண்டி விட்டுவிட்டீர்கள்.. அதை
தெரிந்துகொள்ளாமல் உறக்கம் என் கண்களை தழுவ, என் தாயே ஆணையிட்டாலும் விடமாட்டேன்.. இது உங்கள் மீது நான் வைக்கும் சூளுரை...