கடல் புறா I - அஞ்சன விழிகளின் அமுத மொழியில்...





   “காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த களப் போர் பாடத் திறமினோ ”
                                -கலிங்கத்துப்பரணி.

பொருள்: காஞ்சி நகரம் இருக்க, கலிங்கம் அழிய நடந்த களப் போர் குறித்து பாட..
மறைபொருள்: ஆபரணம் இருக்க, ஆடை குலைய நிகழ்ந்த போர்..
காஞ்சி- மங்கையர் ஆபரணம்; கலிங்கம்- ஆடை.


தமிழ்நாட்டுக்கும், கலிங்க நாட்டுக்குமான பரஸ்பர வெறுப்பை தற்காலிகமாகவாது நிறுத்த விளையும் ஆசையில் சோழ மன்னன் கொடுத்தனுப்பிய சமாதான ஓலையுடன் பாலூர்ப் பெருந்துறைக்கு வந்து சேரும் கருணாகரன், வந்தவுடன் தன்னுடைய தோழனும், வேங்கி நாட்டு இளவரசனுமான அநபாய சோழன் (பிற்கால குலோத்துங்க சோழ மன்னன்) சிறை பிடிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு வெகுண்டெழுகிறான். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் சமீப காலத்தில் காரணமில்லாமல் சிறை பிடிக்கப்படுவதையும் அறிகிறான். உணர்ச்சி வேகத்தில் விழும் வார்த்தைகளை விட வேகமாக சண்டையில் சிக்கும் அவனைக் காவலர் துரத்த, தப்பிக்க வழி தேடும் அவன் மாளிகை ஒன்றினுள் பதுங்குகிறான். இளைய பல்லவனது ஆசை தப்பிப்பதில் இருந்தாலும், விதி அவனை மாட்டிவிடவே வழி செய்கிறது. காவலர்களின் கூர்வேல்களில் இருந்து தப்பும் கருணாகரன், தப்பவே முடியாத காமனின் கணைகளுக்கு இரையாகிறான்.

மாளிகை அறையின் இருளில் பதுங்கி இருக்கும் கருணாகரனை திகிலின் வயப்படுத்தும் வண்ணம் அறையை நெருங்குகிறது ஒரு மோகன உருவம். நெருங்குவதோடு நில்லாமல் அறையைத் தாளிடவும் செய்கிறது. அசந்தர்ப்பமான நிலையில் சிக்கி நிகழவிருக்கும் அசம்பாவிதத்தையும், அந்த அஞ்சன விழியாளின் அலறலையும், அதைத் தொடர்ந்து காவலருடன் நிகழப் போகும் சண்டையையும் எதிர்பார்த்து கண்ணை மூடிக் காத்திருக்கும் கருணாகரனுக்குக் கேட்பது அலறல்ல, அதிகாரக் குரலே. வியப்பின் வசப்படும் கருணாகரனை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது அவனுக்குக் கிடைக்கும் வரவேற்பு.

கையில் வாளுடனும், கண்களில் வேல்களுடனும் அவனை வரவேற்கிறாள் அந்த அஞ்சன விழியாள். தொடரும் சம்பாஷணையின் மூலம் தான் தேடி வந்த கடாரத்து இளவரசனுடைய மகளது வாள் முனையில் மட்டுமல்லாது, அவளது அஞ்சன விழிகளின் அமுத மொழியிலும் சிக்கியிருப்பதை உணர்ந்து கொள்கிறான் கருணாகரன். கடாரத்து இளவரசனைக் காப்பாற்றிச் செல்ல சமாதான ஓலையுடன் வந்த தன் நிலை, பாலூர் வந்த சில மணி நேரத்தில் அவரிடமே அடைக்கலம் கொள்ளுமளவு மோசமாகும் என்று கனவிலும் எதிர்பார்க்காத இளைய பல்லவனுக்கு அன்றைய இரவு இருளில் மறைத்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் தான் என்ன? கருணாகரனால் தனது நண்பனை சிறையில் இருந்து காப்பாற்ற முடிந்ததா? கடாரத்து இளவரசனையும் அவரது மகளையும் கலிங்கத்தில் இருந்து சோழ நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்ல முடிந்ததா?  கருணாகரனை தீர்த்துக்கட்டும் முடிவோடு இருக்கும் கலிங்கத்து மன்னன் பீமனையும் அவனது படைகளையும் சமாளிக்க முடிந்ததா?

தமிழில் சரித்திர நாவல்களுக்கு சாண்டில்யனின் பங்களிப்பு பற்றி சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. கடல் புறா அவர் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. கருணாகரத் தொண்டைமான் என்று பிற்காலத்தில் அடைமொழி பெற்று கலிங்கத்தின் மேல் சோழ மன்னன் ஆணையின் பெயரில் போர் தொடுத்து வெற்றி பெற்று, கலிங்கத்துப் பரணியிலும் பாடப்பெற்ற கருணாகர பல்லவனது இளவயது வாழ்க்கையும், கலிங்க நாட்டுடனான பகையையும் இட்டுக் கட்டும் கதை தான் கடல் புறாவின் முதல் பாகம்.

கடல் புறா சாண்டில்யனின் கற்பனையில் உதிக்கக் காரணங்கள் இரண்டு. முதலாவது, கலிங்கத்துப் பரணி. இரண்டாவது, கடல் தாண்டி தமிழ் மக்கள் கடாரம் கொண்ட வரலாறு. கலிங்கத்துப் பரணியில் கலிங்கப் போரின் வெற்றியைப் பற்றி மட்டுமல்லாது, அங்கே கருணாகரன் பயிர்களையும் வீடுகளையும் கொளுத்தி நிகழ்த்திய அட்டூழியங்களையும் படித்த சாண்டில்யன், அவற்றிற்கு கற்பனையில் காரணம் கற்பிக்க எழுதியதே கடல் புறாவின் முதல் பாகம். சமாதானத் தூது பேச கருணாகரன் கலிங்கம் வந்து இறங்குவதில் ஆரம்பிக்கும் கதை, சமரின் முரசொலி கேட்க அவன் காரணமாவதை எடுத்துரைக்கிறது. காரணம் கற்பிப்பதில் மட்டுமல்லாது அருமையான, வேகமான கதையாக்கத்திலும் சாண்டில்யன் வெற்றியே பெறுகிறார்.

வீரம், நட்பு, காதல், விறுவிறுப்பு என்று அனைத்தயும் சரிவிகிதத்தில் தரும் கடல் புறாவின் முதல் பாகம் சாண்டில்யனின் விவரணைகளால் மேலும் அழகு பெறுகிறது. அஞ்சன விழியாளின் அமுத மொழியானாலும், கருணாகரனின் கழுகுப் பார்வையானாலும், அநபாயனின் சீரிய அறிவானாலும், அமீரின் ஆழ்ந்த நட்பானாலும், அகூதாவின் சித்தாந்தமானாலும் அவரது எழுத்தில் புதுப் பரிமாணத்தையே பெறுகிறது. கடைசிச் சண்டையில் இருக்கும் விறுவிறுப்பு எத்தகையதோ அதே அளவிலானது காதல் காட்சிகளில் இருக்கும் விவரணைகளும். அத்தகைய கதைக்கு முதல் வரியாக செயங்கொண்டாரின் வீரமும் காதலும் சொட்டும் சிலேடைச் சொற்களை அமைத்தது பொருத்தமல்லாது வேறென்ன?

முதல் பாகத்தில் கலிங்க, சோழ நாட்டுப் பகையைப் பற்றி விளக்கும் கடல் புறா பிற பாகங்களில் சோழநாடு கடாரம் கொண்ட வரலாற்றை கற்பனை கலந்து சொல்கிறது. எட்டு மாத ஆராய்ச்சியின் பின்னரே எழுதப்பட்டது என்று சாண்டில்யனே முகவுரையில் கூறுகிறார். அந்த ஆராய்ச்சியை கண்கூடாக நாம் கதையில் காணலாம். கலிங்க சோழப் பகை, வேங்கி நாட்டு உள்பிரச்சனை, அகூதா பற்றிய விவரணைகள், பண்டைய கப்பல்கள் பற்றிய தகவல்கள் என எல்லாமே தெளிவாகவும், தேவையான வகையிலும் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடல் புறா கலிங்க நாட்டில் ஆரம்பித்து கடாரம் கொண்ட வரலாற்றை மூன்று தொகுதிகள் வழியாக விளக்குவதைப் போலவே, நாமும் மூன்று பதிவுகளில் பார்ப்போம். 



Comments

  1. இந்தப் பதிவையே சாண்டில்யன் எழுதி இருப்பது போலவே உணர்கிறேன்....அய்யா நானும் ப்ளாக் வைத்திருக்கிறேன் அப்படியே வந்து என்னை ஆசீர்வாதம் செய்து விட்டு போங்கள்....புண்ணியாமாக இருக்கும்....

    ReplyDelete
  2. அய்யா இந்தப் புத்தகம் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை... புத்தக கண்காட்சியில் உங்கள் ஸ்டாலில் கிடைக்குமா...இல்லை சந்தா கட்ட வேண்டுமா...

    ReplyDelete
  3. டைரக்ட்டா லாரி சர்விஸ் வச்சு மொத்தமா இறக்கும் சர்வீஸ இப்ப தான் துவங்கி இருக்கோம். கொஞ்ச நாளிலேயே பிச்சுக்கும் பாருங்க. ;)

    ReplyDelete
  4. பல வருடங்களிற்கு முன்பு கடல்புறாவை நான் படித்தபோது உண்மையிலேயே பிரமிப்பு எய்தினேன். அப்போது எனக்கு மூன்று வயதுதான்...பள்ளியில் ஒழுங்காக படிக்காவிடிலும் பின் தொடர்ந்து கடல்புறாவையும் சாண்டில்யனையும் தொடர்ந்து படித்தேன்... இன்றும் பருத்த புத்தகங்களையும்.... இன்னம் சில பருத்தவைகளையும் தைரியமாக எதிர்கொள்ளும் துணிவை சாண்டில்யனின் எழுத்துக்கள் எனக்களித்திருக்கின்றன என்றால் அது பொய்... மேலும் ஐந்து வருடங்களிற்கு முன்பாக கடல்புறாவை மீண்டும் மீள் வாசிப்பிற்குள்ளாக்கியபோது அது நான் மூன்று வயதில் படித்த கதையில் இருந்து வேறுபட்டிருந்தது....என்ன மாயம்... சாண்டில்யனின் எழுத்துக்கள் கால ஒட்டத்தில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் போல....

    ReplyDelete
  5. சாகசக் கதைகள் எனும் வகையில் அடக்கிவிடக்கூடிய படைப்பு அல்ல கடல்புறா... அதில் சாகசம் இருக்கிறது அதைத்தாண்டிய சுவையான கதை சொல்லல் இருக்கிறது. இவ்வகையான கதை சொல்லல்களே அடுத்த கட்டத்திற்கும் தரமான தேடல்களிற்கும் ஆரம்ப படியாக ஒரு வாசகனிற்கு அமைகிறது. கடல்புறாவில் வரலாறு இல்லை என்பார்கள்...அதனால் என்ன, அது ஒரு வெகுசன பத்திரிகையில் வெகுசன ரசனைக்காக எழுதப்பட்டது...அதன் வெற்றி என்பது வெகுசனரசனையின் பலத்திற்கு சான்று...இன்னமும் எத்தனை காலத்திற்கு கடல்புறா அலைகளில் தவழும் என்பதை காலம் பதிலாக சொல்லட்டும்... சுருக்கமாக எழுதப்பட்ட பதிவு என்பதை தவிர குறையேதுமில்லை.....

    ReplyDelete
  6. சாண்டில்யனின் எழுத்துக்களை நான் படித்து மூன்று வருடங்களுக்கு முன்பு தான். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்பே படித்ததாய் பீலா விடும் வல்லமையையும் இன்ன பிற பிராடுதனங்களையும் எனக்கு அது கற்றுத் தந்தது என்றால் அது மிகையாகாது.

    ReplyDelete
  7. கடல் புறா!! இருபது வருடம் முன்பு படித்ததாக ஞாபகம்... அப்பொழுது எல்லாம் நிறைய புத்தகங்கள் படித்தேன். இப்பொழுது .....?...

    சங்கர்: நீங்க 3 வயசுல இந்த புத்தகம் படிதிர்களா? இது உண்மையா?

    ReplyDelete
  8. ரமேஷ், நேரம் கிடைக்கும் பொழுது அடிக்கடி நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.

    அவனவன் ரெண்டு வயசிலேயே காமிக்ஸ் படிக்கும் போது, நாங்க மூணு வயசிலேயே நாவல் படிக்கக் கூடாதா? என்ன பாஸ் இது ஞாயம்? :)

    ReplyDelete
  9. நம்ம ஸ்கூல் லைப்ரரியில் முன்பு எடுத்து வாசித்திருக்கிறேன். கதை போலவே உங்கள் வர்ணனையும் அருமை. பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  10. துக்கம் சிங்கிளா வராது...தொடராகத்தான் வரும் என்பது ஆன்றோர் வாக்கு!

    விதி வலியது...! ஆனாலும் தமிழ் நாவல் மேலும் உனக்கு அவ்வப்போது கொலைவெறி வரும் என்பதை நினைக்கும்போது புல்லரிக்கிறது!

    ReplyDelete
  11. By the way, Good flow in review and a superb title

    ReplyDelete
  12. இந்தப் பதிவையே சாண்டில்யன் எழுதி இருப்பது போலவே உணர்கிறேன்..நான் இக் கருத்தை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  13. @Shankar Bena: அந்தப் பீசு தான் குசும்பு பண்ணுதுன்னா நீங்களுமா? :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

IT by Stephen King….

Killing joke(r).... (18+)

MIsery - இளகிய மனம் உடையவர்களுக்கு அல்ல.......

Punisher Max in Tamil.... (18+)

The Dark Knight – At war...

Batman Begins – The Revelation…

The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்….

La Belle – துன்பம் தரும் அழகு........

சிறை மீட்டிய சித்திரக் கதை.......

My Love (2007) - காதல் படுத்தும் பாடு…