எச்சரிக்கை:
ஒன்று:இந்தப்பதிவு மிகவும் பெரிது.ஆனால்,ஒரு நல்ல கதையை வாசகர்கள் அறிய வேண்டும் என்ற எண்ணத்திலே வேண்டுமென்றே செய்யப்பட்டது அது.அதிகமான ஸ்கேன்களும் அதற்காகவே....
ரெண்டு:இந்த மாதிரியான கொடுமைகள் இனி அவ்வப்போது தொடரும். :)
நான் பல பேரை சந்தித்து இருக்கிறேன்.அவர்கள் மறக்காமல் கேட்கும் ஒரு கேள்வி: ‘இன்னமும் காமிக்ஸ் படிக்கிறியா என்ன ?’
பொதுவாக காமிக்ஸ் என்றாலே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது நம்மவர்களிடம்.வேறு என்ன, comics குழந்தைக்களுக்கானது என்பதே அது.சரி,காமிக்ஸ் என்றால் என்ன?
அம்புலிமாமா,வாரமலர் போன்றவற்றில் வருவதே காமிக்ஸ் என்று நீங்கள் நினைத்தால்.....
Sorry guys,you are wrong.....
You are wrong big time.....
இத்தாலியில் Tex என்று ஒரு காமிக்ஸ் புக் வருகிறது. அந்த புக் ஒரு இத்தாலியன் வீட்டில் இல்லன்னா அவன இத்தாலியனா மதிக்க மாட்டாங்கன்னு என் நண்பர் சொல்லக் கேட்டப்போ ஆச்சரியமா இருந்தது....அதோட circulation மட்டும் லட்சங்களில .....
எனக்கு தெரிஞ்ச காமிக்ஸ் பத்தி,அதுவும் எனக்கு பிடிச்ச காமிக்ஸ் பத்தி இனிமே அடிக்கடி பார்க்கலாம். அதிலே உங்களுக்கு உண்மையான காமிக்ஸை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
அதுல ஒண்ணு தான் இந்த “சிறை மீட்டிய சித்திரக் கதை”.
தலைப்பே கதை சொல்லுது இல்ல......
அதே தான்..நானும் கதை மட்டும் சொல்லத்தான் இங்க வந்துருக்கேன்.Ultimately,story and stuff are what matters......
சரி,கதைய பார்க்கலாம்.....
உலகத்தை சுற்றி பார்க்கச் செல்லும் கெல்லி மெக்கி,பயணத்தின் போது ஒரு பெண்ணை சந்தித்து காதல் கொள்கிறான்.காதலர்கள் இருவரும் மால்யா என்ற நாட்டிற்க்கு வரும்போது அங்கே பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
ஒரு குதிரை வீரனது சிலையைக் காணும் மெக்கியின் காதலி பூபி,அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விளைகிறாள்.ஆனால் அந்தக் காதலர்களுக்கு தெரியாத உண்மை யாதெனில்,அந்த சிலை அந்நாட்டு பேரரசனது சிலை என்பதும்,அதை தொடுவதும் குற்றம் என்ற விசித்திர சட்டம் அந்நாட்டில் இருப்பதும் ....
கெல்லிக்கும் அவனது தந்தைக்கும் சுமூகமான உறவு இல்லாவிட்டாலும்,தன் காதலியை விடுவிக்க,பணபலமும்,அதிகாரவர்கத்தின் நட்பும் கொண்ட அவரை நாடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லாமல் போகிறது.மெக்கியின் தந்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தொடர்பு கொண்டு,பூபியை விடுவிக்க நினைத்த போதும் முடியாமல் போகிறது. இப்பிரச்சனையை தீர்க்கவும்,பூபியை காப்பாற்றவும் அவர் சார்லி என்னும் துப்பறிவாளரை நியமிக்கிறார்.
உடனடியாக பயணப்பட்டு அந்நாட்டை அடையும் சார்லி,கெல்லியை சந்திக்கச் செல்கிறார்.கெல்லி அங்கே ஒரு முன்னாள் சர்க்கஸ் குடும்பத்தினரோடு வசிப்பது தெரிய வருகிறது.
அவர்களது வீடு பூபியை சிறை வைத்து இருக்கும் கோட்டையை ஒட்டி இருப்பதாலேயே தான் அங்கு வந்து வசிப்பதாகவும்,அவள் எப்போதாவது அவளை உலாவ அனுமதிக்கும்போது அவளைப் பார்க்கும் ஆசையில் தான் தான் அங்கு வந்து தங்கியதாகவும் சொல்கிறான்.மேலும்,அந்தக் கோட்டையில் நுழைந்து அவளைக் காப்பாற்றுவது சுலபமல்ல என்றும் வருந்துகிறான்.
மேலும் அவனிடம் பேசுவதன் மூலம் அவனுக்கு அவனது தந்தை உதவி செய்வார் என்ற நம்பிக்கை இல்லாது இருந்ததையும்,தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, தனது ஆசைப்படி அவன் சித்திரக்காரனாக மாறவே ஆசைப்படுகிறான் என்பதையும் அறிகிறார்.மேலும்,கெல்லிக்கும் அவனது தந்தைக்கும் இருந்த ஒப்பந்தம் பற்றியும் அறிகிறார்.
அதாவது,மகனின் விருப்பத்திற்கு இணங்கி அவனது தந்தை அவனுக்கு ஐந்து வருட கால அவகாசம் தருகிறார் ஒரு சித்திரக்கதை வெளியிடும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த.அதில் அவன் தோற்கும் பட்சத்தில் அவருடைய தொழிலுக்கு வர வேண்டும் என்பதே அவரகளது ஒப்பந்தம்.
ஆனால்,கெல்லியின் சித்திரக்கதை தரமானதாக இருந்தாலும் அவனால் மற்ற பெரிய நிறுவனங்களையோ,தொலைக்காட்சியையோ எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. அவர்களது ஒப்பந்தம் முடிய இன்னும் அரை வருட காலமே இருக்கிறது.
முன்னாள் சர்க்கஸ் கலைக் குடும்பத்தினரோடே தங்கிக்கொள்ளும் சார்லி அவர்களோடு எளிதில் நெருக்கமாகிறார்.ஒரு நாள்,புகழ் பெற்ற சர்க்கஸ் நிறுவனத்தை நடத்திய சூ குடும்பத்தினர் எதற்காக இப்பொழுது சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என்று அறிய ஆசைப்படுகிறார்.இது அவர்களுக்கு பழைய விபத்து ஒன்றை ஞாபகப்படுத்தி துன்பப்படுத்துகிறது.குறிப்பாக சூவின் மனைவி மம்மா விற்கு.
பின்னர்,சூ அவ்விபத்தைப் பற்றி சார்லிக்கு விளக்குகிறார்.உயரமான கம்பியில்,கையில் கழியுடன்,பலரை ஏற்றிக்கொண்டு பாலன்ஸ் செய்தவாறு வித்தை காட்டுவதில் வல்லவர் சூ.ஒருநாள் மூனிச் நகரில் வித்தை செய்யும் போது,அவருக்கு வித்தையின் போது ஏற்படும் தும்மல் காரணமாக,நிலைகுலைந்து அவர் சரிய, குடும்பத்தினரில் மூவர் இறந்ததும்,ஒருவர் ஊனமடைந்ததும்,சூ படுகாயமுற்று,அதில் இருந்து மீள வருடங்கள் ஆனதும்,சூவின் மனைவி மம்மாவை உடைத்துப் போடுகிறது.அவரை சாந்தப்படுத்தும் பொருட்டு தொழிலை நிறுத்தியதாக சொல்லும் சூ,ஆனால் தன்னுடைய பிள்ளைகள் இப்போது ஓய்வாக இருக்கமுடியாமல் தவிப்பதையும் அவர் சொல்லுகிறார்.
அவருடைய பேச்சைக் கேட்கும் சார்லிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.கோட்டைக்கும்,அவர்களது வீட்டிற்கும் நடுவே உள்ள இடைவெளியை கயிற்றினால் இணைத்து அதன் மூலம் பூபியை மீட்க திட்டம் இடுகிறார் அவர்.ஆனால்,சூ அது ஆபத்தான பணி என்றும்,அதை செய்யும் திறமையும்,வலிமையும் அவருக்கு கிடையாது என்று சுட்டுகிறார்.சார்லி,கயிற்றில், ஆறு பேரை சைக்கிளில் பாலன்ஸ் செய்ய வல்ல சூ விடம்,இப்பணியை செய்யுமாறு வேண்டுகிறார்.
முதலில் நடந்த விபத்தைப் பற்றிய எண்ணத்தினால் அவதியுற்று மறுக்கும் அவர்,பின்னர்,சார்லியின் வேண்டுகோளுக்கு இணங்கி, பூபியை சுமந்து வர ஆள் தேடித் தருவதாக ஒப்புக்கொள்கிறார்.இதனால் பெரும் பணம் கிடைக்கும் என்பதை அறிந்த அவரது மகன்கள்,சர்கசினை திறக்க ஆர்வம் கொண்டு,இதில் ஈடுபட விளைகிறார்கள்.ஆனால்,அவர்களைத் தடுத்து தானே போக விழைகிறார் சூ.பூபியை மீட்க திட்டம் தயார் ஆகிறது.பூபியின் எடை,உடலமைப்பு,மனத்திடம் குறித்து தெரிந்து கொள்கிறார்கள்.அவளது எடையை சுமந்து வருவதற்கு ஏற்ற பயிற்சியை ஆரம்பிக்கிறார் சூ.இவை அனைத்தும் மம்மாவிற்கு தெரியாமலே நடைபெறுகிறது.
ஆனால்,இதில் இருக்கும் பிரச்சனைகள் இரண்டு.
ஒன்று: இந்த மீட்பின் போது கயிற்றில் பூபி அடையும் பயம்.
இரண்டு: எந்த வழிமுறையிலும் தொடர்பு கொள்ள முடியாத அவளிடம்,அவளை மீட்க நடக்கும் முயற்சிகளைப் பற்றி தெரியப்படுத்தி அவளை தயார்படுத்துவது.
ஒருநாள் பூபியை பார்க்கும் கெல்லி அவள் கையில் ஞாயிற்றுக்கிழமை வரும் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இருப்பதையும்,அதில் சித்திரக்கதைப் பக்கத்தை அவள் பார்த்துக் கொண்டு இருப்பதையும் கவனிக்கிறான்.அந்த பத்திரிக்கை ‘பாங்காக் போஸ்ட்’ எனவும்,அது அந்நகருக்கு ஒரு பிரதி மட்டுமே வருவதையும்,அதுவும் சந்தா செலுத்தும் சிறைச்சாலை வார்டனுக்கே கொடுக்கப்படுவதையும் சார்லி அறிந்து கொள்கிறார்.
இதைக் கண்டறியும் சார்லிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.பத்திரிகை கடைக்காரனிடம் தன்னை ஒரு ஆங்கிலப் பயணி என்று அறிமுகம் செய்து கொள்ளும் அவர்,அங்கு வரும் ஒரே ஆங்கிலப் பத்திரிக்கையான அதை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தந்தால்,முன்பே படித்து விட்டு திருப்பித் தந்து விடுவதாக உறுதிகூறி அவனை சம்மதிக்க வைக்கிறார்.
பின்னர் பாங்காக்கில் இருக்கும் தன் நண்பன் ஒருவன் மூலம் அதே பத்திரிக்கையை முன்னதாகவே விமானத்தின் மூலம் பெற ஏற்பாடு செய்கிறார்.
பின்னர் கெல்லியை அழைத்து பூபியைக் காப்பாற்றும் முயற்சியில் அவளது உதவி இல்லாது கயிற்றை இணைக்கவோ,அவளைக் காப்பாற்றவோ முடியாது என்பதை விளக்கும் அவர்,அதற்கு, அவளுக்கு தான் காப்பாற்றப்படப் போகும் விஷயத்தை முன்னரே தெரியப்படுத்தி, தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார்.இதனை செயல்படுத்த, தன் யோசனையை கெல்லிக்கு சொல்லுகிறார் சார்லி.
பூபிக்கு தான் காப்பாற்றப்படப் போகும் விசயத்தை,கெல்லி நேசிக்கும் சித்திரக்கதையின் மூலமாகவே சொல்ல ஆசைபடுகிறார் அவர்.கெல்லியிடம் தான் ஏற்கனவே பெற்ற பத்திரிக்கையை கொடுத்து,அதில் இருக்கும் சித்திரக்கதையை நீக்கிவிட்டு,அதற்கு பதிலாக,கெல்லி எழுதிய சித்திரக் கதையின் கதாநாயகன் பக், சிறையில் இருக்கும் பெண் ஒருத்தியை அவளது உதவியின் பேரில் கயிற்றில் சென்று காப்பாற்றுவது போல படம் வரையச் சொல்லுகிறார்.சித்திரக்கதையில் அவள் கயிறுகளை இணைக்க வேண்டிய விதத்தைப் பற்றி தகவல் கொடுக்கச் சொல்லும் அவர்,அவளுக்கு சொல்லப்படும் விசயத்தை புரிந்து கொள்ள ஏதுவாக,கதாசிரியர் பெயரில் கெல்லியின் பெயரை போடச் சொல்லுகிறார்.மேலும்,இப்பத்திரிகையை,தான் கடைக்காரனிடம் வாங்கும் பத்திரிக்கையின் இடத்தில் மாற்றி அனுப்பப் போவதாகவும் கூறுகிறார்.
இதனால் அவர் செய்ய ஆசைப்படும் காரியங்கள் இரண்டு.
பத்திரிகையின் சித்திரக்கதைப் பகுதியை வாசிக்கும் பூபியை ,ஏற்பாடுகளை உணரச் செய்யவும்,உதவி செய்ய தயார் படுத்தவும் ஆசைபடுகிறார்.
மேலும்,கெல்லியின் தந்தைக்கு சித்திரக்கதையின் அருமையை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாகவும் இதை கருதுகிறார்.
திட்டத்தின்படியே கதையைப் படிக்கும் பூபி,உண்மையை தெரிந்து கொள்கிறாள்.தான் செய்ய வேண்டியதை உணர்ந்து தயார் ஆகிறாள்.தான் உணர்ந்து கொண்டதை கெல்லிக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தவும் செய்கிறாள்.
தப்பிச்செல்ல ஏற்பாடுகள் தயார் ஆகின்றன.நாளும் குறிக்கப்பட்டு,பூபியின் மூலம் தொந்தரவுகள் இல்லை என்று உறுதியும் செய்யப்படுகிறது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருக்கும் கவனில் கயிற்றைக் கட்டி,ஒருமுனையில் நங்கூரத்தை சேர்த்து எறியப்படுகிறது.
அந்நேரத்தில் அங்கு வரும் மம்மா,சூ விற்கு இருக்கும் இடுப்புவலியையும்,ஆஸ்துமாவையும் காரணம் காட்டி தடுக்கிறார்.அவளை சமாதானப்படுத்தி விட்டு ,கயிற்றில் ஏறி பூபியை காப்பாற்றச் செல்லுகிறார் சூ.
பூபி என்னும் எலிசா வின் கண்களை கட்டும் சூ,அவளுக்கு ஆறுதல் சொல்லி தைரியம் அளிக்கிறார்.
கொஞ்ச தூரம் கடந்ததுமே ,பூபியை சுமந்து வருவதால் இடுப்புவலி தோன்ற ஆரம்பிப்பதை உணர்கிறார் சூ.இந்நேரத்தில்,மழையும் சேர்ந்து கொள்கிறது.
போதாத குறைக்கு,பூபி தப்புவதும் உடனேயே உணரப்படுகிறது.மழை வலுக்கிறது.
ஒருபக்கம் பேய் மழையில் கயிற்றில் பாலன்ஸ் செய்ய பிரயாசைப்படும் சூ,மறுபுறம் வலியினால் துடிக்கிறார்.கீழே சுளித்துக்கொண்டு ஓடும் காட்டாறு.மழையின் காரணமாக ஆஸ்துமா அதிகப்பட்டு,மூச்சு விடவும் சிரமப்படுகிறார்.
அவரது சிரமத்தை அறியும் பூபி,அவரை மட்டுமாவது காப்பாற்றும் பொருட்டு,பிடியை விட்டுவிட விழைகிறாள்.
இவை அனைத்தும் போதாது என்று,வார்டன் இவர்களை தடுக்க கோடரியின் துணை கொண்டும்,துப்பாக்கியைக் கொண்டும் முயல்கிறான்.
இனி நடப்பதை சித்திரங்களிலேயே காணுங்கள்.....சித்திரக்கதையின் மகத்துவத்தைப் பற்றி பேசும் கதையின் முக்கிய கட்டத்தை சித்திரத்தின் வழி பார்த்து அதற்க்கு நாம் மரியாதை செய்வோம்.
பூபி வந்தவுடன்,அனைவரும் தப்புகிறார்கள். ஏற்கனவே அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால்,தப்புவதற்கு அவகாசம் கிடைக்கிறதே ஒழிய காவலர்களை ஏமாற்றி,எளிதில் தப்ப முடியவில்லை அவர்களால்.
ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி,ஒரு லாரியில் காரை மறைத்துக் கொண்டு காட்டிற்குள் தப்பிச் செல்லுகிறார்கள்.பின்னர்,அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்புகிறார்கள்.
தனக்கு ஏற்பட்டு இருந்த பயத்தை நீக்கி,தன்னம்பிக்கை அளித்ததற்காக சூ சார்லியிடம் நன்றி சொல்லுகிறார்.மேலும்,தாங்கள் இனிமேல் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபடப் போவதாகவும் அறிவிக்கிறார்.மகனின் சந்தோசத்தை அவனது வார்த்தைகளில் அறியும் தந்தை,உரத்தொழிலில் ஈடுபட அவன் தயங்குவதை கண்டுகொள்கிறார்.மகனின் மனம் ஏங்குவது எது என்று தெள்ளென அறியும் அவர்,காலம் அவனது ஆசையை உறுதிபடுத்தியே இருப்பதையும்,தான் நினைத்தவாறு இது சிறுபிள்ளை ஆசை இல்லை என்பதையும் காண்கிறார்.அவனை அவன் வழியே செல்ல மனப்பூர்வமாக சம்மதிக்கிறார்.எல்லோரும் மகிழும் அந்த முடிவை கண்டு நீங்களும் மகிழுங்கள்.....




சிறை மீட்டிய சித்திரக் கதை,சித்திரக் கதையின் அருமையை உணர்த்தும் கதை மட்டுமன்று.
இக்கதை லட்சியம்,தடங்கல்,வருத்தம்,விடாமுயற்சி,அன்பு போன்ற பல விசயங்களை பற்றி பேசுகிறது.ஆனால்,எல்லாவற்றிலும் ஓங்கி நிற்பது அன்பே.சூ தன் மக்களின் மேல் வைத்திருக்கும் பாசத்தின் காரணமாகவே திட்டத்திற்கு ஒப்புக் கொள்வதும்,முன் பின் அறியாத சூ விற்காக பூபி தன்னுடைய உயிரை விடவும் துணிவதும்,தன் மகன் ஏங்குவது எதற்காக என்று தெரிந்தவுடன்,அவனது விருப்பத்தை நிறைவேற்ற அவனது தந்தை விளைவதும்.....இவை அனைத்தும் அன்பின் காரணமாகவே.
இக்கதையில் சார்லியின் கதாபாத்திரம் மற்றவர்களைப் புரிந்து கொண்டு,அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்கும் நல்லவராகவே வருகிறார்.
கதையில் பூபியை மட்டும் அவர் மீட்காது,கதையில் வரும் பல கதாப்பத்திரங்களையும் அவர்களது மனப் போராட்டத்தில் இருந்து மீட்கிறார்.
தன்னுடைய லட்சியம் பணத்தின் முன் பொடியாவதை கண்டு,தன் தந்தையின் ஆசைக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து வருந்தும் கெல்லிக்கும்,அவனது தந்தைக்கும் சித்திரக்கதையின் மகத்துவத்தை பற்றி புரிய வைக்கிறார்.
மேலும் அவர் சூ விற்கு தன்னம்பிக்கை வர வைக்கிறார்.
தமிழில் சார்லியாக வந்த buz sawyer கதைகளில் சித்திரத் தரம் இருக்காது.ஹீரோயிசம் இருக்காது.ஆனால்,கதைத் தரம் இருக்கும்.நிஜ வாழ்கையை ஒட்டிய கதை ஓட்டம் இருக்கும்.
மிக முக்கியமாக,மனதை லேசாக்கவும் ,பக்குவப்படுத்தவும் ஒரு நல்ல கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும்.
இக்கதைக்காக நான் பஸ் சாயர் பற்றி அறிந்து கொள்ள தேடியபொழுது ஒரு இனிய சம்பவம் நடந்தது.பஸ் சாயர் கதைகளுக்கான லிங்க் பலவற்றை நான் காண நேர்ந்தது.
ஆக,இப்பத்திவு எனக்கு இரு வகையில் உதவி செய்துள்ளது.
ஒரு மிக நல்ல கதையை திரும்பவும் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
மேலும்,பஸ்சின் கதைகள் பலவற்றை இனிமேல் படித்து மகிழக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது.
இதுவே நான் ரசித்து,நேசிக்கும் காமிக்ஸ்.இப்போது சொல்லுங்கள்,இதைப் போன்ற கதைகளை தேடித் திரியும் எங்களைப் போன்ற காமிக்ஸ் பிரியர்கள் வெறும் சிறுவர்தானா?
ஆமெனில்,நான் சந்தோசமான நினைவுகளைத் தரும் இது போன்ற கதைகளை வாசிக்கும் சிறுவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
பஸ் சாயர் பற்றி அறிய....
http://en.wikipedia.org/wiki/Buz_Sawyer
பஸ் சாயர் ஆங்கில கதைகளுக்கான லிங்க்...
கடைசியாக,தமிழில்,முத்து காமிக்ஸில் வந்த இக்கதை பற்றிய details......
முத்து காமிக்ஸில் இதழ் எண் 42 ஆக வந்த இப்புத்தகம்,இன்னும் பலருக்கு, ஆசிரியர் விஜயன் முதற்கொண்டு, மிகப் பிடித்ததே என்றால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. செப்டம்பர் மாதம் 1975 இல் தமிழில் வெளியான ‘நல் முத்து’ இது.பின்னர் இது மறுபதிப்பும் செய்யப்பட்டது.
சார்லியின் முதல் கதை இதழ் நிர்:39 ஆன குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் ஆகும்.இது ஆங்கிலத்தில் THE MONKEY BUSINESS என்ற பெயரில் வெளியானது.
இக்கதை தமிழில்,முத்து காமிக்ஸில் சார்லியின் இரண்டாவது ஆகும்.
இந்நேரத்தில் நான் சிலருக்கு நன்றி சொல்ல விளைகிறேன்.
இதைபோன்ற பல நல முத்துக்களை நமக்கு அறிமுகம் செய்த, செய்யும் லயன்,முத்து காமிக்ஸ் குழுமத்தோர்....
என்னிடம் இருந்த அட்டைப்பட ஸ்கேன் பாடாவதியாக இருந்ததால்,அதை முத்து விசிறி ப்ளாக்கில் இருந்து பெற்றுக்கொண்டேன்.மேலும்,இதனுடைய வெளியீட்டு தேதியையும் அவர் ப்ளாக்கில் இருந்தே அறிந்தேன்.அதற்காக அவருக்கு ஏன் நன்றிகள்.
Last but not least, இப்பதிவை எழுத நான் தயங்கிய போது என்னை எழுதத் தூண்டிய கனவுகளின் காதலருக்கு....
அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே.....
“சனியனுக்கு சட போட்டு விட்டு இருக்கீங்கண்ணா.....அது பூ வச்சுப் பாக்காம போகாது ... :) “
சிறை மீட்டிய சித்திரக் கதை----- கதையில் சிறை மீட்டினாலும்,கதையால் உங்கள் மனதை சிறை கொள்ளும்.....
கடைசியாக,
என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களே,காமிக்ஸிர்க்கு புதியவர்களே.....
நண்பர்களே,தங்கள் வருகைக்கும்,இப்பதிவை இவ்வளவு நேரம் பொறுமையாக படித்ததற்கும் நன்றி.
இப்பதிவு பலரைச் சென்று அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,அதற்க்கு வோட்டுப் போடுவது ஒரு வழி.
And guys,do spread the word.Let people know what we like in comics and why we do....












