கடல்புறா 3 – புயல் விடு தூது....
ஆழிப் பேரலையின் ஆதிக்கத்தால் ஆடிய கடல்புறாவின் தள்ளாடத்திற்கு ஏற்ப இளையபல்லவன் மனதும் இரு அழகிகளின்பாலும் சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. வாழ்க்கையைப் போன்ற நிலையற்ற அலைகளின் மீது தன் பார்வையை ஓடவிட்ட கருணாகரன், ஒரே வருடத்தில் தன் வாழ்வில் நிகழ்ந்துவிட்ட நிகழ்வுகளை எண்ணிப்பார்த்து விதியின் கரங்களைப் பற்றி வியந்து கொண்டிருந்தான். பாலூரில் சந்தித்த பைங்கிளியும், அக்ஷயமுனையில் சந்தித்த அழகியும் அவன் மனதில் மாறி மாறி உலா வந்தார்கள் என்றாலும், மஞ்சள் அழகியின் முகமே அந்நேரத்தில் அவன் மனதில் பிரதானமாய் எழுந்து நின்றது. அவளுடைய மர்மம் நிறைந்த வாழ்க்கையையும், சோகம் நிறைந்த முகத்தையும் நினைத்து கருணாகரன் துன்பத்தின்வயப்பட்டு மனம் மருகி நின்றான். அக்ஷயமுனையை விட்டுக் கிளம்பும்போது “அலையைப் போலவே என்னை தழுவிவிட்டு பிரிகிறீர்கள்” என்று மஞ்சள் அழகி சொன்னது அவனது மனதை அறுத்துக் கொண்டிருந்தது. தன்னை மயக்கிய மஞ்சள் மயிலை நினைத்து அவன் விட்ட பெருமூச்சை காற்று களவாடிக் கொண்டு முன்னே ஓடியது. கட்டறுபட்ட காட்டுப்புரவியென ஓடிய காற்று அவனுக்கு சாந்தத்தை அளிக்கவில்லை. அலைகளை சாந்...