மனிதனின் வாழ்க்கையில் விரவி இருப்பது தேடலே! ஆனால் தேடலே வாழ்கையாய் இருந்தால்...?
வாழ்கையை தொலைத்தவன் கடந்த காலத்தின் சுக நினைவுகளில் தஞ்சம் அடைந்து இன்புறலாம்!ஆனால் கடந்த காலத்தையே தொலைத்தவனது கதி?
புரட்டி எடுக்கும் கடலில் பற்றிக் கொள்ளக் கிடைத்த பலகையை தவற விட்டவனது மன நிலை எப்படி இருக்கும்?
சுடும் பாலைவனத்திலுள்ள ஒரே சோலைவனத்தின் பாதையை தொலைத்தவனது நிலைக்கும்,நினைவை தொலைத்தவனது நிலைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.
கண்ணைப் பறிக்கும் ஓவியத்தோடு,ஆரம்பக்கட்டமே நம்மைக் கவர்கிறது.ஒதுக்குப்புறமான ஒரு கடற்கரையில்,ஆர்ப்பரிக்கும் கடலுக்கும்,துள்ளிப் பறக்கும் பறவைகளுக்கும் நேர் மாறாக அமைதியாய் உள்ள ஒரு வீட்டின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவரை அவரது நாய் வற்புறுத்தி இழுத்துச் செல்கிறது.அந்த நாய் வழிநடத்தி செல்ல, தொடர்வது முதியவர் அபே மட்டுமல்ல, காலனும்!
சலனமே உருவாய் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் அருகிலேயே சலனமே இல்லாமல் கிடக்கிறது ஒரு உடல்.மனைவியின் உதவியோடு,அவனை வீட்டிற்கு தூக்கிச் செல்லும் முதியவர் அபே, அவனுக்கு சிகிச்சை செய்ய முன்னாள் டாக்டரும் இந்நாள் குடிகாரியுமான மார்த்தாவை அழைத்து வருகிறார்.சுற்று வட்டாரத்தில்,நாற்பது மைல் தூரத்திற்கு,குடிக்காக மருத்துவர் உரிமம் ரத்து செய்யப்பட்ட அவளை விட்டால் அவசர உதவிக்கு வேறு யாருமில்லை.அவசரமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையின் பலனாக உயிர் பிழைக்கிறான் அந்த மனிதன்.ஆனால்,தோட்டா மூளையில் ஏற்படுத்திய காயம் காரணமாக அவனுக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிடுகிறது.அவனது அடையாளத்தை தெரிந்துகொள்ள,மிஞ்சி இருப்பது,அவனது தோளில் பச்சை குத்தப்பட்டு இருக்கும் XIII என்னும் அடையாளம் மட்டுமே!
மார்த்தா அவனுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது,அவன் உயிர்
பிழைத்தான் என்னும் சேதியை கேட்க ஆவலாய் காத்திருக்கும் அந்த இரு உயிர்களின் வாழ்க்கைக்கும்,சுற்றிலும் வெறும் மணலால் சூழப்பட்டு இருக்கும் அந்த வீட்டிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது தான்.மகனை இழந்த அந்த முதியவர்கள் ,நினைவை இழந்த அவனை, தங்கள் மகனாகவே பார்கிறார்கள்.
நாட்கள் சென்றாலும், அவனது நினைவு திரும்புவதாயில்லை.தொடரும் நாட்களில், உடல்நலனையும்,முதியவர்களின் அன்பையும்,அரவணைப்பையும் பெற்றாலும் அவனது மனதில் அமைதி இல்லை.கருமேகத்தின் பின்னே மறைந்து நிற்கும் சூரியன் போன்ற தன் நினைவை திரும்பப் பெற இயலாமல் தவிக்கிறான்.
ஒரு நாள்,மார்தாவோடு கடற்கரைக்கு செல்லும் போதும், அவனது மனக்குமுறல்கள் அடங்குவதாயில்லை.பாறையில் மோதித் தெறிக்கும் கடல் அலைகளின் இரைச்சல்கள்,அவனது மனக்குமுறல்களோடு மோதித் தோற்கின்றன.
மார்தாவின் மனமும் அமைதி நிறைந்ததாய் இல்லை.XIII ஐ குணப்படுத்த முயன்ற காலத்தில் அவளுக்குள் அரும்பிய காதலால் அவள் மனதில் இருப்பதும் சலனமே!
தனது மனது விரும்பும் ஒருவனோடு, அழகிய கடற்கரையில் இருந்தாலும்,அதிகக் குடியால் பெருத்திருக்கும் அவளது உடலும்,தாழ்வு மனப்பான்மையும்,கைகூட முடியாத ஒருதலைக் காதலின் வலியும் அவளை வருத்துகின்றன.XIII ஐ கண்ட நாள் முதல்,தன்னை ஆட்கொண்டிருக்கும்;தனது வாழ்வே சிதையக் காரணமான குடிப் பழக்கத்தை மறக்கவும் உதவிய அவனது அண்மை,இப்போது அவளை ஊமையாகடிக்கும் ரகசியம் தான் என்ன?
சலனமே உருவான கடற்கரை,மனச்சலனம் கொண்ட இருவருக்குமே அடைக்கலம் தருகிறது.அலையின் இரைச்சலோடு மனதின் இரைச்சலும் கலக்கிறது.மூளையை ஊடுருவிச் சென்ற தோட்டாவின் காரணமாக,தனது மூளையை தழுவி நிற்கும் ரத்தப்படலம் விலகவும்,தனது தொலைந்து போன நினைவுகளை மீட்டெடுக்கவும் வாய்ப்பு வராதே போகலாம் என அறியப்பெறும் அவனது மனது மேலும் வேதனையுறுகிறது.வீடு திரும்பும் அவனுக்கு,அங்கே நிலவும் அமைதி அன்னியாமாய் தெரிகிறது.மன அமைதி இல்லாதவனுக்கு நிம்மதி கிடைக்கும் இடம் தான் எது?
![]()
ஆனால்,இறந்து கிடக்கும் நாய்,அவனது முன்னெச்சரிக்கையை தட்டி எழுப்புகிறது.உதிர்ந்த இலைகள் ஊஞ்சலாடும் பின்னணியில் ,உயிர்களின் ஊசலாட்டமும் நடக்கிறது. தொடரும் போராட்டத்தில்,அவன் இரு நிலைகுலையச் செய்யும் உண்மைகளை அறிந்து கொள்கிறான்.
அவனைக் கொல்லும் வெறியோடு,ஒரு மிகப்பெரிய கும்பல்,மங்கூஸ் என்பவன் தலைமையில் அலைவதும்,
அவர்களையே வேட்டையாடும் அளவிற்கு தனக்கு திறமை இருப்பதும்…
இந்த உண்மை தட்டி எழுப்பும் கேள்விகள் அபாயகரமானவை!அவனைக் கொல்ல அலையும் கும்பல் யார்?எதற்காக?யார் அந்த மங்கூஸ்?அவனது நோக்கம் என்ன?இதையெல்லாம் விட ஒரு நிலைகுலையச் செய்யும் கேள்வி, “இவர்கள் தேடி வந்து கொல்லத் துடிக்கும் அளவிற்கு XIII செய்தது என்ன?அவன் யார்?”
தன்னைத் தேடி வந்த கொலையாளிகளால் கொல்லப்பட்ட முதியவர்கள் அபே மற்றும் சாலியை கண்டு மனம் வருந்தும் அவன்,மார்தாவின் உயிரைக் காக்கவாவது தான் உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று உணர்கிறான்.
தன்னைக் கொல்ல வந்தவர்கள் அடையாளத்திற்காக கொண்டு வந்த படத்தில்,தன்னோடு நிற்கும் பெண்ணைத் தேடி சென்று கண்டுபிடித்து ,அவள் மூலம் தன் தேடலை ஆரம்பிக்க நினைக்கிறான்.போடோவின் பின்னே இருக்கும் புகைப்பட நிபுணரின் விலாசத்தை காணும் XIII,அவர் மூலம் அப்பெண்ணின் விலாசம் அறிய,ஈஸ்ட் டவுன் நோக்கி கிளம்புகிறான்.
இறந்தவர்களை விட்டுவிட்டு,தன் இறந்த காலத்தைப் பற்றிய தேடலை ஆரம்பிக்கிறான் XIII.ஆனால்,அது என்னவாக இருந்தாலும்,அழகான ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி!
இந்தக்கட்டம் ஓவியரின் திறமைக்கும்,இக்கதையின் கவித்துவத்திற்க்கும் ஒரு சான்று!பின்னே grim ஆகத் தெரியும் கடந்த காலத்தை விட்டுவிட்டு,எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன்(காரின் bright நிறத்தை கவனிக்க!) செல்லும் XIII இன் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு காட்சி!
வழி தொலைத்த கப்பல்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்,தனக்கு முன்னே தெரியும், கலங்கரை விளக்கத்தை போன்றது,தான் நாடிச் செல்லும் தேடல் என்று XIII நினைப்பானாயின்,அது மிகப்பெரிய தவறு என்று சீக்கிரமே உணர்ந்து கொள்வான்.இனி வரும் நாட்களில், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள மட்டுமல்லாது,தனது நினைவை உயிர்ப்பித்துக் கொள்ளவும் அவன் போராட வேண்டும்.தான் நிற்கும் கடற்கரைப் பாறையில் வந்து வெறி கொண்டு மோதும் அலைகளைப்போல , அவனது வாழ்வில் மரணங்களும், சோகமும், பழியும், வெறுப்பும், கோபமும், அபாயமும் மோதப்போவது அவனுக்கு தெரியாது.![]()
வரப் போகும் நாட்களில் உளவாளி, கொலைகாரன், குற்றவாளி, பைத்தியம், புரட்சிக்காரன், அதிரடிக்காரன் எனப் பற்பல பெயர்களில் அழைக்கப்படப் போகிறான் என்றாலும், தனது சொந்தப் பெயர் தெரியாமல்,அதனைத் தேடியே அலையப் போகிறான்,வருந்தப் போகிறான்.
ஆனாலும்,இதனால் நம்பிக்கை இழந்து முயற்சியை நிறுத்தப் போவதில்லை அவன். கரையை முத்தமிடத் துடிக்கும் அலைகளைப் போன்றதே அவனது கடந்த காலத்தின் தேடலும்...
XIII – தேடலே வாழ்கையாய்....
**********************************************************************
கட்டுக் கட்டாக பணம்,அதன் அருகிலேயே,அதனை ஒருவிதமான சோகத்துடன் பார்க்கும் ஒருவன்,என இருக்கும் இந்தப் பாகத்தின் அட்டைப்படத்தை கண்ட உடனேயே ரசிகனுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ளும் என்பது திண்ணம்.அதிலும்,இதனைப் பற்றி அதிகம் அறியாத,குறிப்பாக, பின்னாட்களில் இக்கதை தொடப் போகும் அசாத்திய உயரங்களை அறிந்திருக்க முடியாத,அந்நாளைய ரசிகன் ஒருவனின் ஆர்வம் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும்.இந்தக்கதையின் ஆசிரியர் Jean Van Hamme,ஓவியர் William Vance. இருவருக்குமே காமிக்ஸ் பிரியர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை.
Robert Ludlum எழுதிய The Bourne Identity கதையின் ஒன் லைனை எடுத்து அதிலிருந்து பின்னப்பட்டதே இதன் கதை.தோட்டா பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப் படும் ஒருவன்,அந்த தோட்டா ஏற்படுத்திய காயம்,அதிர்ச்சி காரணமாக தனது பழைய நினைவுகளை இழந்து, தனது கடந்தகாலத்தை தேடிச் செல்வதே கதை.நாவலுக்கும்,இந்த காமிக்ஸ்க்கும் பல ஒற்றுமைகள் உண்டு.ஆனால்,அவை அடிப்படை அளவிலேயே முடிந்து,கதை படர ஆரம்பிக்கும் போது வெவ்வேறு பாதைகளில் முத்திரை பதிக்க ஆரம்பித்தன.
முதல் பாகத்தில் நல்ல கதை, பரபர ஆக்சன் என்று இருந்தாலும், அதில் விரவி இருக்கும் மென்சோகமே அதற்கு ஒரு கவித்துவமான நிலையை வழங்குகிறது; தாமரை தடாகத்தில் தனித்து தெரியும் நிலவைப் போல!இது பின்னர் வந்த கதைகளில் குறைந்தது துரதிர்ஷ்டமே!
12 ஆம் பாகம் வரையாவது எஞ்சி இருந்த பரபரப்பு, பின்னர் கொழகொழப்புக்கு இடம் கொடுத்தது.ஒரு நெடிய கதைத் தொடரை கடைசி வரை பரபரப்பாக கொண்டு போவது மிகக் கடினமே!அது கைகூடாத நிலை வரும் போது,அதற்கு முதற் காரணமாய் இருக்கக் கூடியவை, எழுத்தாளருக்கு ஏற்படும் அலுப்பு,கவனமின்மை,மமதை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றே! இவற்றில் முக்கிய காரணமாய் விளங்கக் கூடியது அலுப்பே! XIII இன் நிலையும் அப்படியே ஆனது.
அது பற்றியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்போம்.கூடிய சீக்கிரம் அடுத்த பாகத்தை பற்றிய பதிவு வரும்.
**********************************************************************
XIII பற்றி பேசும் இந்த நேரத்தில்,தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இதை அறிமுகப்படுத்திய திரு.விஜயனுக்கு நன்றிகளைத் தெரிவத்துக் கொள்கிறேன்.
காமிக்ஸ் ரசிகர்கள் பலர்,ஜம்போ ஸ்பெஷலைப் பற்றி புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கும் போது,அதனைப் பற்றி எழுதாமல்,ஏன் ஆங்கிலப் பதிப்பை பற்றி எழுதுகிறேன் என்று யாராவது ஆச்சர்யப்பட்டால்,ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விழைகிறேன்.நான் ஆங்கிலக் கதைகளை திரும்பவும் படிக்க உதவியது, தவறு…தூண்டியது, ஜம்போ ஸ்பெஷல் என்றால் அது மிகை ஆகாது.மட்டமான சாணி தாளையும், கருப்பு வெள்ளை படங்களையும் கண்ட உடனேயே ஆங்கில பதிப்பிடம் சென்று தஞ்சமடைந்து கொண்டேன்.சுமாரான மொழிபெயர்ப்பும் அதற்கு உதவி செய்தது.எல்லோரையும் போல,என்னையும் அந்த புத்தகத்தை விரும்பவும்,அதன் சாதனையை வியந்து பாராட்ட விடாமல் செய்த கசப்பான சில உண்மைகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மட்டமான சாணி தாள்,கருப்பு வெள்ளை படங்கள்,சுமாரான மொழிபெயர்ப்பு,எல்லாவற்றிற்கும் மேலாக,இப்புத்தகம் வெளியாவதற்கு முன்னர், லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரிடம் பற்பல முறை ஆர்வம் மேலிட வெளியீட்டைப் பற்றிய தகவல்களை நேரிலும்,தொலைபேசியிலும்,இணையம் மூலமும்,தபாலிலும் கேட்ட ரசிகர்களுக்கு அவர்கள் கொடுத்த மரியாதை!
திரு.விஜயனுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.புதைமணலில் சிக்கி இருப்பவன்,தன்னை நோக்கி வீசப்படும் கயிற்றை கண்டு பாராமுகமாய் இருந்தால்,இழப்பு அவனுக்கு தான்.லயன் காமிக்ஸின் நிலை இப்போது அதுவே. ரசிகர்களிடம் பாராமுகமாய் இருந்துவிட்டு,அவர்களின் கேள்விகளுக்கு சரியான தகவல்களைத் தராமல், உங்களுக்கு தேவை வரும் போது அல்லது சும்மாவேனும் சால்ஜாப்பு சொல்வதற்கு அவர்களது கருத்துக்களை அடுத்த முறை கேட்கும் போது, இதை நினைவு கொள்ளுங்கள்…..
பொறுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும்,நம்பிக்கைக்கும் ஒரு அளவு உண்டு!
XIII இன் மொத்த பாகத்தையும் ஒரே புத்தகமாய் போட்டு சாதனை செய்ததற்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில், வாசகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்று சொல்லி மட்டுமே கொள்ளும் திரு.விஜயனுக்கு,எனது கண்டனங்கள் மற்றும் அனுதாபங்கள்.