மும்பைப் பெருநகரின் நெடிந்துயர்ந்த கட்டடங்களின் நிழலில், இடிந்து கிடக்கும் கட்டிடங்களுக்கு இடையில் தொலைந்து போன தங்கள் வாழ்கையைத் தேடும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் அநாதை இல்லம் ஒன்றை நடத்திவருபவன் ஜேகப். ஜேகப்பின் அர்ப்பணிப்பும், உதவும் மனப்பான்மையும் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு சிறியது அவன் நடத்திவரும் அநாதை இல்லத்திற்கு கிடைக்கும் நன்கொடை. சிறுவர்களுக்கு அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கங்களானாலும், அடுத்த மாதத்திற்கான உணவானாலும், எப்போதுமே எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. சூறைக் காற்றில் அலைக்கழிக்கப்படும் சிறு இறகென அவர்களது வாழ்க்கை எப்போதும் தடுமாற்றத்தில் இருந்தாலும், குழந்தைகளுக்கேயுன்டான மகிழ்ச்சியும், ஜேகப் மீதான நம்பிக்கையுமே அவர்களது தடம் புரண்ட வாழ்கையில் தெரியும் சிற்றொளி.
வருமானமின்மையின் காரணமாக அநாதை இல்லத்தை இழுத்து மூடும் நிலை அருகாமையில் தெரிந்தாலும் சளைக்காது போராடும் ஜேகப்பிற்கு உரிய நேரத்தில் உதவி செய்ய முன்வருகிறது ஒரு டேனிஷ் நிறுவனம். ஜேகப் நடத்தும் இல்லத்திற்கு பணவுதவி செய்ய முன்வரும் அந்த நிறுவனம், தங்களது நிறுவனத்தின் நிர்வாகி யோர்கன் ஹான்சன் ஜேகப்பை நேரில் சந்திக்கப் பிரியப்படுகிறார் என்றும், பணத்தைப் பெற்றுக்கொள்ள ஜேகப் தன் பிறந்த நாடான டென்மார்க்கிற்கு நேரில் வரவேண்டும் என்றும், யோர்கனை சந்திக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கிறது. பணக்காரர்களின் மீது மாறாத கசப்பைக் கொண்டிருக்கும் ஜேகப்பிற்கு இது கோபத்தையே ஏற்படுத்துகிறது. மறுக்க நினைக்கும் முன்கோபக்காரன் ஜேகப்பின் மனதை சிறுவர்களின் நிலை குறித்து நினைவுபடுத்தி மாற்றுகிறாள் அவனுடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் மிசஸ்.ஷா .
சிறுவர்கள் அனைவரிடத்திலும் அன்பு காட்டும் ஜேகப்பிற்கு மிகப் பிடித்தமான ஒருவனும் அங்கே உண்டு. ஜேகப்பால் எடுத்து வளர்க்கப்பட்ட பிரமோத்திற்கும் ஜேகப்புக்குமான உறவு, ஜேகப்பின் சமூகநலனால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட உறவல்ல. எட்டு நாட்களில் வரவிருக்கும் தன் பிறந்தநாளில் ஜேகப் தன்னுடன் இருக்க மாட்டான் என்று ஏங்கும் மனம் பிரமோத்திற்கும், அவனுடைய பிறந்தநாளுக்கு முன்னரே வந்துவிடுவதாக உறுதிமொழி அளிக்கும் அன்பு ஜேகப்பிற்கும் உண்டு.
டென்மார்க்கில் யோர்கனை சந்தித்து அவனுக்கு தன்னுடைய இல்லத்தின் தேவைகளையும் சாதனைகளையும் பற்றி விளக்கும் ஜேகப், யோர்கனுக்கு இது பற்றிய மேலோட்டமான ஆர்வமே இருப்பதைக் காண்கிறான். தன்னுடைய நிறுவனம் ஏன் பணவுதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது எனும் அவனது கேள்விக்கும் மேம்போக்கான பதிலே கிடைக்கிறது. மேலும், தன்னால் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிறுவனத்திற்கு வருடத்திற்கு மில்லியன் டாலர் தரப்படும் என்றாலும், ஜேகப்பின் நிறுவனத்தை தான் இன்னும் பரிசீலனையில் தான் வைத்திருப்பதாக யோர்கன் சொல்வதைக் கேட்கும் ஜேகப் தனது கோபத்தை அடக்கப் பிரயத்தனப்படும் நேரத்தில் யோர்கனிடம் இருந்து விசித்திரமானதொரு அழைப்பு விடுக்கப்படுகிறது. இரண்டொரு நாளில் நடக்கவிருக்கும் தனது மகளது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு ஜேகப்பை வற்புறுத்துகிறான் யோர்கன்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் ஜேகப் தன்னிடம் பலவருடங்களுக்கு முன்னர் சண்டை போட்டுப் பிரிந்த தனது முன்னாள் காதலியை ஹெலனைக் காண்கிறான். இப்போது அவள் யோர்கனின் மனைவி என்பதையும் அறிந்து கொள்கிறான். மேலும், மணமகளது உரையின் போது அனா, தான் யோர்கனுக்கு பிறந்தவளல்ல என்றாலும் தன்னை சொந்த மகளைப் போலவே இத்தனை வருடமும் நடத்திய யோர்கனைத் தான் தன் தந்தையாக மதிப்பதாகச் சொல்ல, ஜேகப் உடனே வெளியேறுகிறான்.
அந்நியப்பட்டுப் போன தன் நாட்டில் தனக்குத் தெரியாமலேயே தன் மகள் இத்தனை வருடமும் வளர்ந்திருப்பதை உணரும் ஜேகப், ஹெலனை சந்திக்கச் செல்கிறான். தனது மகள் அனாவிடம் தான் தான் அவளது உண்மையான தந்தை என்று சொல்ல வேண்டுமென்று சண்டையும் போடுகிறான். அனாவிற்கு உண்மை தெரிய வந்ததா? அவள் யாரைத் தன் தந்தையாக ஏற்றுக் கொள்வாள்? ஜேகப் ஹெலனை இருபது வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தது தற்செயலானது தானா? சொந்த மகள் கிடைக்கப்பெற்றபின் பிரமோத்தின் நிலை என்ன? என்பதை படத்தின் மிச்சப் பகுதி உணர்ச்சிப் பிரவாகத்தோடு கொண்டு வருகிறது.
இளவயதில் பல தவறுகளைச் செய்து, சிற்றின்பத்தின் பிடியில் தனது உயரிய கொள்கைகளைத் தொலைத்து, வெறுப்பிலும்,ஆத்திரத்திலும் முன்கோபம் கொண்ட மனிதனாக மாறிய ஒரு மனிதனின் கதாப்பாத்திரம் Mads Mikkelsonக்கு(ஜேகப்). நன்கொடைக்காக ஒரு பணக்காரனின் கையக் குலுக்க டென்மார்க் வரை போக வேண்டுமா என்று வெறுப்புடன் சண்டை போடும் போதும், யோர்கனுடனான தனது முதல் சந்திப்பில் வெறுப்பையும் கோபத்தையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளும் போதும், தனது
மகள் தனக்குத் தெரியாமல் இத்தனை வருடம் வேறொருவனிற்கு மகளாய் வளர்ந்திருக்கிறாள் என்று அறியவரும் போது ஏமாற்றம்,கோபம்,சோகம் இவை அனைத்தையும் தனது கண்ணிலேயே கொண்டு வரும் போதும் பின்னுகிறார் என்றாலும், உண்மை தெரியவந்த பின் தன்னை சந்திக்க வரும் மகளுடன் சங்கோஜத்தோடும், அந்நியத்தன்மையோடும், ஏக்கம் கலந்த பாசத்தோடும் பேசும் கட்டத்தில் ஜேகப்பாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக தயங்கித் தயங்கி தன் தொலைபேசி எண்ணைத் தரலாமா என்று கேட்கும் மகளிடம் குரல் தழுதழுக்க,கண்கள் அலைபாய பேப்பரையும் பென்சிலையும் நீட்டும் கட்டத்தில் முனகோபக்காரனுள் ஒளிந்திருக்கும் ஏக்கம் நிறைந்தவொரு மனிதனை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இரண்டாம் சந்திப்பில் தனது சிறுவயது புகைப்படங்களை மகள் காட்டுகையில் அதில் இருக்கும் யோர்கனைக் காணும் போதெல்லாம் ஏக்கமும் ஏமாற்றமும் கலந்த வெறுப்புடன் பார்க்கும் கட்டத்தில் அவரது கண்களே ஆயிரம் கதை சொல்கிறது.
அனாவாக Stine Fischer Christensen. சாதாரண பணக்கார மகளாக அறிமுகமாகும் அனாவின் பாத்திரம் போகப் போக கதையின் முக்கியப் புள்ளிகளில் ஒன்றாக மாறுகிறது. ஜேகப் தனது தந்தை எனத் தெரிந்த பின் ”நான் உயிரோடு இருந்ததே இதுவரை உங்களுக்குத் தெரியாதா?” என்று ஏக்கத்தோடு கேட்கும் போதும், பக்கத்து வீட்டுக்காரனிடம் உரையாடுவதைப் போல சொந்தத் தந்தையிடம் பேச வேண்டிய சங்கோஜத்தையும் அருமையாக படம் முழுவதும் கொண்டு வந்திருக்கிறார்.
தனக்கு வேண்டியதைப் பெறும் வகையில் பிறரை செயல்படச் செய்யும் பணக்கார மனிதனாக Rolf Lassgard(Jorgen). பணக்காரத்
திமிருடன் யோர்கன் செய்வதாய்த் தோன்றும் செயல்களில் நிறைந்திருப்பது தன் குடும்பத்திற்கான கவலையே. எதிர்காலத்தில் தன் குடும்பம் நலமாக இருப்பதற்காக ஜேகபின் விருப்பு வெறுப்புகளைக் கண்டுகொள்ளாது, தனது மனைவியின் சங்கட நிலையைப் பற்றி அக்கறைப்படாது தனக்கு மிகப் பழக்கமான பொம்மலாட்டத்தை அரங்கேற்ற யோர்கன் முடிவெடுக்கக் காரணம் ஏக்கமும், பாசமுமே. கடைசிவரையிலும் தனக்கு வேண்டியவண்ணம் பிறரை சதுரங்கக் காய்களைப் போல உபயோகப்படுத்தும் யோர்கன் தனக்கு வேண்டியது கிடைத்தபின், லட்சியத்தின் போர்வையில் அதுவரை மறைந்திருந்த பயம் வெளிப்படும் கட்டம் அருமையானது. பறிக்கப்பட்ட பொருளை நினைத்து அழும் குழந்தையெனக் கதறியழும் யோர்கனை அந்தக் கட்டத்தில் பார்க்கும் எவருக்கும் அவன் மேலிருந்த பார்வை முற்றிலும் மாறியே போகும்.
சோகம் கலந்த அருமையான கதையும், அற்புதமான நடிகர்களும் இக்கதையின் மிகப்பெரிய பலமென்றாலும் இக்கதையின் உயிர்நாடி நம்பத் தகுந்த பாத்திரங்களின் வசம் இருக்கிறது. கவனித்துப் பார்த்தால், இந்தப்படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் தவறுகள் இல்லாமலில்லை. தனது முன்கோபத்தால் அனாதைக் குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய பணத்தை வேண்டாமென மறுக்கும் ஜேகப், தனது இலக்கை நோக்கி பிறரை நடை போடவைக்கும் யோர்கன், சிறுபிள்ளைத்தனமான கோபத்துடனும், பழிவாங்குவதான எண்ணத்துடனும் கடந்த காலத்தை முற்றாக புதைக்க ஆசைப்பட்டு தந்தையையும் மகளையும் பிரிக்கும் ஹெலன் என கதாப்பாத்திரங்கள் அனைத்துமே நம்பக் கூடியவகையில் அமைக்கப்பட்டிருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று. உணர்ச்சிகரமான காட்சிகளில் கண்களும், கைகளும், உடல் மொழியும் உணர்ச்சிகளைக் உணர்த்தும் வகையில் காட்டப்படுகிறது. கதாப்பாத்திரங்கள் அனைத்தும் அதிகப்பட்ச
நேர்மையோடும் அவற்றின் இயல்புகளோடும் காட்டப்படுவதும் படத்தின் மிகப் பெரிய பலமே. வாழ்க்கையைப் போலவே, ஒரு மனிதனைப் பற்றி முதலில் நம் மனதில் ஏற்படும் கருத்து போகப் போக படத்திலும் மாற்றம் பெறுகிறது. கடைசியில், கதாப்பாத்திரங்கள் அனைத்தும் வேறு விதமான பார்வையில் தெரிவதும், அவற்றின் மீது ஈடுபாடும், அன்னியோன்யமும் ஏற்படுவது ஒரு இயக்குனராக Susanne Bier க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
படத்தில் பொங்கிப் பிரவகிக்கும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டியோ என்னவோ படத்தில் இசை அடக்கமாகவே காணப்படுகிறது. ஆர்ப்பாட்டமேயில்லாது அமைதியாய் அமைக்கப்பட்டிருக்கும் இசை படத்தின் சோகத்திற்கு மேலும் ஒரு கனமான உணர்வையே ஏற்படுத்துகிறது. குறிப்பாக,தந்தையை அனா சந்தித்துப் பேசும் கட்டத்தில் ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் இசை, நிலைமையின் கொடுமையை சோகத்தோடு எடுத்துவர பெரிதும் உதவுகிறது. படத்தில் எத்தனையோ அருமையான காட்சிகள் இருந்தாலும், இதுவே அருமையான காட்சி என்பது எனது கருத்து.
படத்தின் கடைசிக் கட்டத்தில் இந்தியா வரும் ஜேகப் பிரமோத்திடம் பேசும் கட்டம் ஒன்று வரும். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான சினிமாத்தனமான முடிவு இல்லாமல், வாழ்கையின் நிதர்சனமே இங்கும் ஓங்கி நிற்கிறது. தன் வளர்ப்புமகனை கண்டவாறே ஜேகப் சிரிக்கும் இயலாமை கலந்த சிரிப்புக்கான அர்த்தங்கள் தான் எத்தனை? பாசமெனும் தீயில் தீயாத மனமும் உண்டோ?
Rating: 5/5.